இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நாளை பயிற்சியில் | தினகரன்


இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் நாளை பயிற்சியில்

ஜூலை மாதம் டெஸ்ட் தொடரை நடத்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ள நிலையில், வீரர்கள் நாளை திங்கட்கிழமையில் இருந்து பயிற்சியை தொடங்க இருக்கிறார்கள்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூலை 1-ம் திகதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு  இங்கிலாந்து கிரிக்கெட் சபை தடைவிதித்தது. ‘தி ஹண்ட்ரெட்’ தொடரை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளது. ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகள் கொண்ட இப்போட்டி ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜூலை 1-ம் திகதி வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்கு தடைவிதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து - மேற்கிந்திய தீவுக்கு இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா - இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் ஆகியவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.

ஆனால் சில அறிவிப்புகளால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டின் திட்டங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் இங்கிலாந்துப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்த அறிவிப்பில், ஜூன் 1-ம் திகதி முதல் இங்கிலாந்தில் படிப்படியாக விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என்று கூறினார்.

இரசிகர்கள் இல்லாத காலி மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறலாம். கொரோனாவின் பாதிப்பைப் பொறுத்து இதற்கான அனுமதி தொடர்ந்து நீடிக்கப்படும். தொலைக்காட்சியில் விளையாட்டுப் போட்டிகளைப் பார்க்கும் இங்கிலாந்து மக்களின் மனநிலை மேம்படும் மற்றும் நிதிச் சிக்கலை ஓரளவு போக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்றார்.

இந்த பருவகாலத்தில் விளையாட்டுப் போட்டிகளில் எதுவும் இங்கிலாந்தில் நடைபெறாமல் போனால் 3,553 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரி டாம் ஹாரிஸன் கூறியிருந்தார்.

இந்தநிலையில், நாளை திங்கட்கிழமை முதல் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்தின் மத்திய ஒப்பந்த பட்டியலில் உள்ள வீரர்கள் மற்றும் கவுன்ட்டி நடைமுறையில் உள்ள வீரர்கள் ஆகியோரில் இருந்து 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள், கவுன்ட்டி அணிகளுக்கு சொந்தமான மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள். முதலில் பந்து வீச்சாளர்கள் பயிற்சி மேற்கொள்வார்கள். 15 நாட்கள் கழித்து துடுப்பாட்டவீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவார்கள்.

அனைத்து வீரர்களும் பங்கேற்கும் முழு வலைப்பயிற்சி இரு வாரங்களுக்குப் பிறகு தொடங்கும். இந்த நடைமுறையில் வீரர்களின் பாதுகாப்பில் முழு அக்கறை செலுத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...