கிரிக்கெட், றக்பி, உதைபந்தாட்ட பயிற்சிகள் ஜூனில் ஆரம்பம் | தினகரன்

கிரிக்கெட், றக்பி, உதைபந்தாட்ட பயிற்சிகள் ஜூனில் ஆரம்பம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக தடைப்பட்ட கிரிக்கெட், றக்பி மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய விளையாட்டுக்களுக்கான பயிற்சிகளை எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்க முடியும் என சம்பந்தப்பட்ட மூன்று விளையாட்டுத்துறை சங்கங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

இதன்படி, சுகாதார அமைச்சின் வழிகாட்டலுடன் விளையாட்டுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய பயிற்சிகளை ஆரம்பிக்க முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் கடந்த 11ஆம் திகதி கொழும்பு உள்ளடங்கலாக நாடு பூராகவும் உள்ள அபாய பிரதேசங்களில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தை தளர்த்தியது.  

இந்த அறிவிப்பை அடுத்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றை கடந்த 15ஆம் திகதி நடத்துவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது.

எனினும், விளையாட்டுத்துறை அமைச்சின் புதிய அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்சிகள் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி அஷ்லி டி சில்வா தெரிவித்தார்.  இதன்படி, குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்கவுள்ள அனைத்து வீரர்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், பயிற்சி முகாமில் கலந்துகொள்ளவுள்ள அனைத்து வீரர்களும் கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்கப்படவுள்ளனர்.  

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி பயிற்சிகளை ஆரம்பிக்கவுள்ள  மூன்று விளையாட்டு சங்கங்களிடமும் இருந்து அந்தந்த ,அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்களின் பெயர் விபரங்களை விளையாட்டுத்துறை அமைச்சு கோரியுள்ளது. 

இதன்படி, கிரிக்கெட், றக்பி மற்றும் உதைபந்தாட்டம் ஆகிய மூன்று தேசிய அணிகளில் இடம்பெறும் வீர, வீராங்கனைகளின் விபரங்களை இம்மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சுக்கும், விளையாட்டுத்துறை வைத்திய நிறுவனத்துக்கும் சமர்ப்பிக்குமாறு விளையாட்டுத்துறை அமைச்சு கோரியுள்ளது. 

இதுதொடர்பிலான விசேட சுற்றறிக்கையொன்று விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ் ருவன்சந்த்ர, விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரியவின் கையொப்பங்களுடன்  3 சங்கங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், வீரர்கள் பின்பற்ற வேண்டிய எட்டு முக்கிய வழிகாட்டல்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...