வாகனங்கள் உட்பட ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி தடை

வாகனங்கள் உட்பட ஆடம்பரப் பொருட்கள் இறக்குமதி தடை-Importing Luxury Goods Including Cars and Items Can Produced Locally Banned

ஆடம்பர மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இன்று (14) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

ஆயினும் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை என அவர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதோடு, இது தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்தியாவசிய பொருட்கள் அல்லாத, ஆயினும் ஆடம்பர பொருள் பிரிவிற்குள் வகைப்படுத்தப்படாத, கட்டுமானம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்யும் போது, அதற்கான பணத்தை 180 நாட்களின் பின்னர் செலுத்துதல் எனும் அடிப்படையில் அப்பொருட்களை இறக்குமதி செய்ய முடியுமாயின் அவற்றுக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட, உள்ளூர் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் சுய தொழிலாளர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், இவ்விடயம் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சிறிய, நடுத்தர மற்றும் பாரிய கைத்தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்பவர்கள் தங்களது பிரச்சினைகளை, நிதி அமைச்சுக்கு தெரியப்படுத்தலாம் என்றும் தெரிவித்தார். 

அதன் அடிப்படையில், ஆடம்பர மோட்டார் வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள், அதிவிசேட குளிசாதனப் பெட்டிகள், ஆடம்பர பொருட்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய காய்கறிகள், பழங்கள், மிளகுத்தூள் மற்றும் தேவையற்றவை எனக் கருதப்படும் அனைத்து பொருட்களையும் இறக்குமதி செய்வது மூன்று மாதங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதியைக் குறைப்பதன் மூலமும், உள்நாட்டு நாணயம் வெளியில் செல்வதை தடுப்பதன் மூலமும் இலங்கை ரூபாயை வலுப்படுத்த முடியும். அதற்காவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் 78 பக்கங்கள் உள்ளன.

சில பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் நோக்கில் வரி சதவீதங்களை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...