சிகையலங்கார நிலையங்களை திறக்க புதிய வழிகாட்டுதல்கள்

எதிர்வரும் 11ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டவுடன், சிகையலங்கார நிலையங்களும் அழகுக்கலை நிலையங்களும்  தங்களது  செயற்பாடுகளை ஆரம்பிக்கும் வகையில், சுகாதார அமைச்சினால் புதிய கடுமையான வழிகாட்டுதல்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

முடி வெட்டுதல், தலை முடிக்கு நிறமூட்டுதல், கால் கை நகங்களை அழகுபடுத்தல், கால், கைகளிலுள்ள உரோமத்தை நீக்குதல் (cutting/trimming of hair, dying of hair, manicure/pedicure and waxing of arms and legs) ஆகியவற்றுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, ஏனைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என புதிய நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது சிகையலங்கார நிலையங்கள் அல்லது, அழகுக்கலை நிலையங்களை அவற்றின் உரிமையாளரோ, முகாமைத்துவமோ திறக்க விரும்பினால், குறித்த பகுதியிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியிடம் (MOH) அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதோடு,  அவர்களினால் சரி பார்க்கப்பட்டு அதற்கான  விண்ணப்பப்படிவங்கள் வழங்கப்படும். 

அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் அமைய,  விண்ணப்பப்படிவங்கள் சுகாதார வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதனைத் தொடர்ந்து பொதுச் சுகாதார பரிசோதகரினால் சரி பார்க்கப்பட்டு, சுகாதார வைத்திய அதிகாரியிடம் பரிந்துரை செய்யப்படும். இந்நிலையில் சிகையலங்கார நிலையங்களும் அழகுக்கலை நிலையங்களும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டு, அவற்றை நடத்துவதற்கான சான்றிதழ் வழங்கப்படும். 

எந்தவொரு நிலையங்களும் எழுத்து மூலமான சான்றிதழ் இல்லாமல் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சிகையலங்கார நிலையங்களிலும் அழகுக்கலை நிலையங்களிலும் கடமையாற்றுபவர்கள் வாடிக்கையாளர்களை அணுகும்போது, முகக் கவசம் மற்றும் கண் கவசங்களை (goggles/eye shields) அணிய வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

ஒரு மீற்றர் இடைவெளியை பேணும் வகையில் அமையும்  இடவசதிக்கேற்ப வாடிக்கையாளர்களின் வருகை மட்டுப்படுத்தப்பட வேண்டுமென்பதோடு,    நடைமுறையின்போது ஒரு மீற்றர் தூரத்தை பேண வேண்டும்.

சிகையலங்கார நிலையங்களிலும் அழகுக்கலை நிலையங்களிலும் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்களை நேருக்குநேராக அணுகுவதை எப்போதும் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்பதோடு, வாடிக்கையாளர்களின்   பின்பக்கம் மற்றும் பக்கவாட்டிலிருந்து மாத்திரமே அவர்களை அணுக வேண்டும்.

குறித்த நிலையங்களில் குளிரூட்டப்படும் வசதிக்கு பரிந்துரை செய்யப்படவில்லை என்பதோடு, சாத்தியமான மிகக்  குறுகிய நேரத்திற்குள் உரிய சேவைகளை வழங்குமாறு குறித்த பரிந்துரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...