முகக் கவசங்களால் சூழலுக்கு ஆபத்து

உரிய முறையில் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

கழிவுகளாக அகற்றப்படும் முகக் கவசங்கள், எதிர்காலத்தில் பாரியதொரு சுற்றுச்சூழல் பிரச்சினையாக உருவெடுக்குமென, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், கலாநிதி தர்னி பிரதீப் குமார  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் முகக் கவசங்கள்,  பெரும்பாலும் ஒருமுறை மாத்திரமே பயன்படுத்தப்பட்டு, அகற்றப்படுகின்றன. இவ்வாறு அகற்றப்படும் முகக் கவசங்களினால் ஏற்படும் பிரச்சினை பாரதூரமானதெனவும், அவர் தெரிவித்துள்ளார். 

தற்போது இவ்வாறு அகற்றப்படும் அதிகளவான முகக் கவசங்கள் ஆங்காங்கே இருப்பதை  அவதானிக்க முடிவதாகத் தெரிவித்துள்ள அவர், அவற்றை  சாதாரண குப்பைகளுடன் சேர்த்து அகற்றாது, அவற்றை அகற்ற தனியான முறையை ஏற்படுத்த வேண்டுமெனவும், தெரிவித்துள்ளார். 

வீடுகளில் பயன்படுத்தப்பட்டு அகற்றப்படும் முகக் கவசங்களை எரிக்க வேண்டும். அல்லாவிடின்,  அவற்றை  சுகாதாரமான முறையில் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இல்லையெனின், சுற்றுச்சூழலில் அகற்றப்பட்ட முகக் கவசங்கள், மழைக்காலத்தில் நீரோட்டத்துடன் சேர்ந்து கடல் நீரினுள் கலந்து விடுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதோடு, கடற்கரையோரங்களில் கரையொதுங்கவும் வாய்ப்புக் காணப்படுகின்றதெனவும், அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பல ஐரோப்பிய நாடுகளின் கடற்கரையோரங்கள் இதன் காரணமாக நாசமடைந்துள்ளதாகவும், தர்னி பிரதீப் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
 


There is 1 Comment

Add new comment

Or log in with...