வடமராட்சி சம்பவம்; கைதான 4 பெண்களுக்கும் பிணை | தினகரன்


வடமராட்சி சம்பவம்; கைதான 4 பெண்களுக்கும் பிணை

வடமராட்சி சம்பவம்; கைதான 4 பெண்களுக்கும் பிணை-Vadamarachchi Police Beaten 4-Women-Released On Bail

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலில் அரச உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட 04 பெண்களையும் பிணையில் விடுவித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

“மணல் கடத்தல் கும்பல்களை நாம் ஆதரிக்க முடியாது. அவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத பெண்களைத் தாக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை. இந்த விடயம் பாரதூரமான மனித உரிமை மீறல். அத்துடன், ஊரடங்குச் சட்ட வேளையில் பருத்தித்துறை வைத்தியசாலை ‘பாஸ்’ உடன்தான் இரண்டு பெண்கள் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்றனர். அதன்போதே அவர்கள் கைது செய்யப்பட்டனர்” என்றனர் எனச் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் நீண்ட சமர்ப்பணத்தை நீதிவான் முன்னிலையில் முன்வைத்தார்.

அதனடிப்படையில் பொலிஸாரின் கடும் ஆட்சேபணையின் பின் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கி நீதவான் உத்தரவிட்டார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனை – மாளிகைத் திடலைச் சேர்ந்த ஒரு சாரார் சட்டத்துக்குப் புறம்பாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக கிராம மக்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அது தொடர்பில் நேற்றுமுன்தினம் (30) நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸாருக்கு சம்பந்தப்பட்ட தரப்பால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

அதனால் நேற்று (01) சம்பவ இடத்துக்குச் சென்ற விசேட பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்டபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஒன்று திரண்டு கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். பொலிஸார் கைது செய்ய முற்பட்டவரை தடுத்து, பெண்கள் கடும் எதிர்ப்பைக் காட்டினர்.

இதன்போது பொலிஸார் கண்மூடித்தனமாக பெண்களைத் தாக்கி சந்தேக நபர்களைக் கைது செய்ய முற்பட்டனர். இதன்போது நிலைமை மோசமாகியதும் பொலிஸார் அங்கிருந்து வெளியேறினர். சம்பவத்தில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களில் இருவரும் அந்தப் பெண்களுக்கு வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற இருவரும் பருத்தித்துறை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நால்வரும் பருத்தித்துறை நீதிமன்றில் நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று (02) மாலை முற்படுத்தப்பட்டனர்.

அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண்கள் இருவரும் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் வைத்தியசாலைக்கு உணவு எடுத்துச் சென்ற பெண்கள் இருவரும் பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர்.

அவர்கள் நால்வருக்கும் பிணை வழங்குவதற்கு பொலிஸார் கடும் ஆட்சேபனையை முன்வைத்தனர்.

சந்தேக நபர்கள் நால்வர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ், பிணை விண்ணப்பத்தை முன்வைத்து மன்றில் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

இரு தரப்பு விண்ணப்பங்களை ஆராய்ந்த நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேக நபர்களை பிணையில் விடுவித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

(சுண்டுக்குளி நிருபர், யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்)


Add new comment

Or log in with...