ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் காலமானார்

பழம்பெரும் ஹிந்தி நடிகர் ரிஷி கபூர் தனது 67ஆவது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார்.

பழம்பெரும் ஹிந்தி நடிகரான  ரிஷி கபூர்,  இயக்குனராகவும் படத் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர்.

பிரபல நடிகர் ராஜ் கபூரின் இரண்டாவது மகனான இவர், தந்தை நடிப்பில் வெளியான ‘மேரா நாம் ஜோக்கர்’ (என் பெயர் ஜோக்கர்) என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து 1973ஆம் ஆண்டு பாபி என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில், 2018ஆம் ஆண்டு ரிஷி கபூருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் கடந்த ஒரு வருடமாக அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து, கடந்த செப்டெம்பர் மாதம் அவர் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், வீட்டில் இருந்த ரிஷி கபூருக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 


Add new comment

Or log in with...