"கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"

"கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது"-Dissolved Parliament Cannot Reconvened-President Respond to Opposition's Letter

ஜனாதிபதி எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கைக்கு பதில்

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை திரும்ப கூட்ட முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கையொப்பங்களுடன் கடந்த செவ்வாய்க்கிழமை (26) ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கூட்டு அறிக்கைக்கு பதில் வழங்கியுள்ள ஜனாதிபதி, தனது செயலாளர் பீ.பி. ஜயசுந்தர மூலம் பதில் வழங்கியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே குறித்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, குறித்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள தரப்பினர், தேர்தலை நடத்துவது அவசியம் இல்லை என கருதுகின்றமை அதில் புலனவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை பாதுகாப்பதற்கு அரசு எந்திரம் அர்ப்பணிப்புடன் காணப்படும் இந்நேரத்தில், எதிர்க்கட்சியானது ஒரு குறுகிய அரசியல் நோக்கில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருக்கு
பீ.பி. ஜயசுந்தர எழுதியுள்ள குறித்த கடிதம் வருமாறு:

29 ஏப்ரல் 2020
கௌரவ சஜித் பிரேமதாச
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்

எதிர்க்கட்சியின் கூட்டு அறிக்கை
உங்களால் 26.04.2020 அன்று முன்வைக்கப்பட்ட எதிர்க்கட்சியின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கருத்துகள் தொடர்பானது.

அந்த அறிக்கையின்படி, அதில் கையெழுத்திட்ட கட்சிகள் தேர்தலை நடத்த தேவையில்லை எனவும், கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்து தொடர்பில் சுகாதார மற்றும் ஏனைய அரச சேவையாளரக்ள, முப்படையினர், பொலிஸார் மற்றும் தனியார் பிரிவினரின் அர்ப்பணிப்பை கௌரவிக்காமல் இருப்பதுமாகும் என அதிமேதகு ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய நான் தெரிவிக்கிறேன்.

பாராளுமன்றம் அதன் ஐந்தாண்டு காலத்தின் முடிவில் அல்லது ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தை கலைக்கும் சந்தர்ப்பத்தில் கலைக்கப்படும் என்று அதிமேதகு ஜனாதிபதி மேலும் வலியுறுத்துவதோடு, அதற்கமைய 2020, மார்ச் 02 ஆம் திகதி அதிமேதகு ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்துள்ளார்.

மேற்கூறிய கலைப்பு தொடர்பில் உங்களால் முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் கையெழுத்திட்ட அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ளதன் மூலம், மேற்குறித்த கலைப்பு அறிவிப்பின் செல்லுபடியாகும் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என உங்களுக்குத் தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியாது எனவும், 2020-03-02 ஆம் திகதி அதி விசேட வர்த்தமானியின் மூலம் அறிவிக்கப்பட்ட கலைப்பு அறிவிப்பின் படி, 25-04-2020 அன்று தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், அதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் 20.06.2020 ஆம் திகதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்குமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 70 (7) பிரிவுக்கு இணங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பதை உங்களுக்குத் தெரிவிக்குமாறு அதி மேதகு ஜனாதிபதி எனக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இப்படிக்கு
உண்மையுள்ள

பீ.பி. ஜயசுந்தர
ஜனாதிபதி செயலாளர்


Add new comment

Or log in with...