பிளாஸ்மா சிகிச்சையை ஆரம்பித்தது இந்தியா

முதலாவது முயற்சியில் வெற்றி. டெல்லி நோயாளி குணமடைந்தார்

கொரோனா நோயாளிகளுக்கான சிகிச்சையில் பிளாஸ்மா சிகிச்சை சிறந்த பலனைத் தருவதாக உலகெங்கும் இப்போது பரவலாகப் பேசப்படுகிறது. தென்கொரியாவில் பிளாஸ்மா சிகிச்சைதான் கொரொனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உதவியது. இந்தியாவும் இப்போது பிளாஸ்மா சிகிச்சையை நாடுகின்றது.

பிளாஸ்மா என்றால் என்ன? அச்சிகிச்சை கொரோனாவை எவ்வாறு குணப்படுத்துகின்றது? இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்வது அவசியம்.

பிளாஸ்மா என்பது குருதி அணுக்களை ஏந்திச் செல்லும் நிறம் அற்ற திரவமாகும். இந்தச் சிகிச்சை முறையில், முழுமையாகக் குணமடைந்த ஒரு கொரோனா நோயாளியிடமிருந்து கொரோனா வைரஸ் நோயாளிக்கு பிளாஸ்மா மாற்றப்படுகிறது.

கொரோனா நோயில் இருந்து மீண்ட நோயாளியின் இரத்தத்திலிருந்து பிறபொருள் எதிரிகளைப் பயன்படுத்தி மற்றைய கொரோனா நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, இரத்த அணுக்களும் அதிகரிக்கின்றன. இதனால் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட உடல் தயாராகிறது. இதுவும் இரத்த தானம் செய்வது போன்றுதான் செய்யப்படுகிறது. இரத்த தானத்திற்கு ஆகும் நேரமே இதற்கும் ஆகும்.

இது இரத்ததானம் போல் ஒரு முறை அல்லாமல் வாரத்தில் 2 - 3 முறை இந்த பிளாஸ்மா சிகிச்சை செய்யப்படுகிறது. இதற்காக கொரோனாவில் இருந்து மீண்ட இரண்டு பேர் பாதிக்கப்பட்டவருக்கு உதவ வேண்டியிருக்கும்.

பிளாஸ்மா சிகிச்சையானது இந்தியாவிலும் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ளது.இதை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிலையமும் அனுமதித்துள்ளது. கேரளா , குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் பி.லிம்போசைட் கலங்களால் சுரக்கப்படும் கொரோனா பிறபொருள் எதிரிகளை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே ‘பிளாஸ்மா தெரபி’ என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லி லீற்றர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்தியா முழுவதும் இச்சிகிச்சை விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நோய்த் தொற்றில் இருந்து மீண்டவர்கள் உடலில் அந்த தொற்றினைப் போராடி அழிக்கும் எதிரணுக்கள் உருவாகியிருக்கும் என்பதுதான் இதன் அடிப்படைக் கோட்பாடு.

ஆனால் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட ஒருவரின் உடலில் நோய் இல்லை என்பதை உறுதிப்படுத்த இரண்டு முறை சோதனை செய்யப்பட்ட பிறகுதான் அவரது உடலில் இருந்து எதிரணுக்கள் எடுக்கப்படும்.

இதேவேளை இந்தியாவின் முதல் பிளாஸ்மா சிகிச்சை பெற்ற கொரோனா நோயாளி பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். டெல்லியில் கவலைக்கிடமான நிலையில் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்ற அவர் பிளாஸ்மா சிகிச்சை பெற்று முழு குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 49 வயது நபர் கடந்த ஏப்ரல் 4ம் திகதி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்து வரும் டெல்லி மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் அவரின் உடல் நிலை மோசமடையத் தொடங்கியது. இதையடுத்து அவருக்கு ‘வெண்டிலேட்டர்’ உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாச கருவி உதவியுடனே வாழ்ந்து வந்த அவருக்கு அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சைகள் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை. நாளுக்கு நாள் உடல் நிலை மோசடைந்து கொண்டே சென்றது.

இதையடுத்து நோயாளியின் உறவினர்கள் அவருக்கு பிளாஸ்மாக சிகிச்சை அளிக்குமாறு கோரிக்கை முன்வைத்தனர். அவரது குடும்பத்தினரே பிளாஸ்மா தானக் கொடையாளியையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். பிளாஸ்மா தர முன்வந்தவருக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியானது.

அத்துடன் பிளாஸ்மா கொடையாளிக்கு ஹெபடைட்டிஸ் பி, ஹெபடைட்டிஸ் சி மற்றும் எச்.ஐ.வி.தொற்று உள்ளதா என்பதற்கான சோதனையும் நடத்தப்பட்டது. அதுவும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதியானது. அதன் பிறகே பிளாஸ்மா கொடையாளியிடம் இருந்து இரத்தம் பெறப்பபட்டு பிளாஸ்மா பிரித்தெடுக்கப்பட்டது. இதற்கிடையில் பிளாஸ்மா சிகிச்சைக்கு மத்திய அரசின் அனுமதி பெற்ற மேக்ஸ் மருத்துவமனை நிர்வாகம் டெல்லி நோயாளிக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்க முடிவு செய்தது.

இதன்படி டெல்லி நோயாளிக்கு கடந்த 14ம் திகதி இரவு அரசு நிர்ணயித்த விதிமுறைகளின்படி பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த நான்கு நாட்களில் அதாவது 18ம் திகதி அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. இதையடுத்து 18ம் திகதி காலை அவரால் இயல்பாக மூச்சுவிட முடிந்ததால் செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டது.

பிளாஸ்மா சிகிச்சையால் பூரணமாக குணம் அடைந்த டெல்லி நபர் ஞாயிற்றுக்கிழமையான நேற்றுமுன்தினம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

 


Add new comment

Or log in with...