எதிர்க் கட்சிகளின் பொது வேலைத் திட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்காது

எதிர்க் கட்சிகளின் பொது வேலைத் திட்டத்தை அரசு ஒருபோதும் ஏற்காது-Keheliya Refused Sumanthiran Proposal

அரசுக்கு ஒத்துழைப்பு  தரும் பொது வேலைத் திட்டத்தை சுமந்திரன் இன்று கையளிப்பதாக அறிவிப்பு

கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டும் நோக்கில் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் எதிர்க்கட்சிகளின் பொது வேலைத் திட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென ஆளும் தரப்பு பேச்சாளரும் முன்னாள் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று (26) வலியுறுத்திக்கூறினார்.

எதிர்க்கட்சிகள் இணைந்து அரசுக்கு ஒத்துழைப்பு  தரும் பொது வேலைத் திட்டத்தை தயாரித்துள்ளது. அந்த  திட்டம் இன்று திங்கட்கிழமை அரச தரப்புக்கு கையளிக்கப்படவுள்ளது. இந்த பொது வேலைத் திட்டத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையிலான குழுவே தயாரித்துள்ளது.

பொது வேலைத் திட்டத்தை கையளித்த பின்னர் அரசாங்கம் அதனை ஆழமாக பரிசீலிக்குமெனத் தெரிவித்த அரசு தரப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, என்றாலும் கூட அந்த பொது வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாடு எதுவும் அரசாங்கத்திற்கு கிடையாதென கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி சுமந்திரன் தயாரிக்கும் வேலைத் திட்டமாக இது காணப்படுவதால் அரசு மிக அவதானமாக செயற்பட வேண்டியுள்ளது. பொது வேலைத் திட்டத்தின் பிரதான நோக்கம் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீளக்கூட்டுவதாகும். பாராளுமன்றத்தை மீளக்கூட்டும்  எண்ணம் ஜனாதிபதிக்கோ அரசாங்கத்திற்கோ கிடையாது தற்போதைய நிலையில் அது அவசியமென ஜனாதிபதி கருதவில்லை. இன்றைய நிலையில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டிய தேவை ஏற்படவில்லை. எனவும் ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.

எதிர்கட்சிகளின் ஒத்துழைப்பை ஏற்று கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டினால் எதிர்க்கட்சி தரப்பு நிலையியல் கட்டளைகளை இடைநிறுத்தும் தீர்மானத்தை மேற்கொண்டால் என்ன செய்வது? என்பது குறித்து நாங்கள் யோசிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சம்பளத்தைத் பெறாமல்  இந்த பாராளுமன்ற அமர்வை கூட்ட விருப்பம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தரப்பினர் தமது  ஓய்வூதியத்தையும் பெறாமல் இருப்பார்களா? என்பது குறித்தும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

நாடு எதிர்கொண்டுள்ள கொரோனோ சவாலிலிருந்து மீட்சி பெறுவதுதான் அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் நிலைப்பாடாகும். இவ்வாறான நிலையில் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை கூட்டுவதால் பெரிதாக எதனையும் சாதித்துவிட முடியாது சிலவேளை அந்த முயற்சி அரசுக்கு எதிர் விளைவுகளை தோற்றுவிக்கவும் கூடும். எனவே தான் சுமந்திரன் குழுவின் வேலைத்திட்டத்தை நிராகரிக்க  தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

எம். ஏ. எம். நிலாம்


Add new comment

Or log in with...