பேலியகொடை மீன் சந்தை நாளை திறப்பு

மொத்த வியாபாரத்திற்கே அனுமதி

பேலியகொடை மீன் சந்தையானது,  மொத்த வியாபாரிகளுக்காக நாளையதினம் (25) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக, பேலியகொடை மீன் விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பேலியகொடை மீன் சந்தையிலிருந்து மீன் கொள்வனவு செய்துகொண்டு சென்ற பிலியந்தைலையைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவருக்கு, கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து,  அச்சந்தையை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 22ஆம் திகதி முதல் 03 நாட்களுக்கு  பேலியகொடை மீன் சந்தை மூடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பேலியகொடை மீன் சந்தையைச் சேர்ந்த வர்த்தகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 529 பேருக்கு PCR பரிசோதனை செய்யப்பட்ட நிலையில்,  அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் மொத்த வியாபாரிகளுக்காக பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், சில்லறை விற்பனைகளை  முன்னெடுக்கப் போவதில்லை என்பதோடு, மொத்த வியாபாரிகள் மாத்திரம் சந்தைக்கு வருகை தர அனுமதிக்கப்படுவார்கள் எனவும், பேலியகொடை மீன் விற்பனையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சந்தைக்கு வருகை தரும் மொத்த வியாபரிகள் அனைவரும் சுகாதார அமைச்சின் ஆலோசனைகளை பின்பற்றி நடக்குமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 


Add new comment

Or log in with...