கிழக்கில் தபால் சேவை வழமைக்கு திரும்பியது

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையையடுத்து கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடைப்பட்டிருந்த தபால் சேவை நேற்று புதன்கிழமை (22) வழமை நிலைக்கு திரும்பியுள்ளது.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலை காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி தபால் திணைக்களத்தின் சகல செயற்பாடுகளும் தடைப்பட்டிருந்தன.

தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு சுமுகமான நிலை ஏற்பட்டு வருவதையிட்டு தபால் திணைக்களத்தின் சேவைகளும் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் வழமை நிலைக்கு திரும்பியுள்ளதோடு தபால் விநியோகமும் வழமை போன்று இடம்பெற்றது.

தபால் அலுவலகங்கள் தொற்று நீக்கப்பட்டு கரும பீட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, தபால் அலுவலகங்களுக்கு வரும் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பேணும் வகையில் கை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளிக்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளதால் அக்கரைப்பற்று அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை அஞ்சல் அலுவலகங்களினால் கிளினிக் நோயாளர்களுக்கான மருந்து விநியோகம் வழமை போன்று இடம்பெற்றது.

ஒலுவில் விசேட நிருபர்


Add new comment

Or log in with...