இலங்கைத் தேசத்தை ஆறாத் துயரில் ஆழ்த்திய ஈஸ்டர் தினத் தாக்குதல்கள்!

ஒரு வருட நிறைவு இன்று

- அப்பாவிகள் 259 பேர் உயிரிழப்பு, 500 இற்கு மேற்பட்டோர் படுகாயம்;, வேதனைகள் மறைவது எப்போது?
- மு.ப. 8.40 மணிக்கு ஆலய மணிகள் ஒலிக்கட்டும்! மறைந்த எமது உறவுகளுக்காக மெழுகுவர்த்திகள் ஏற்றி வழிபடுவோம்!
- மு.ப. 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி

இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் கொடிய பயங்கரவாதக் கும்பலொன்று தற்கொலைத் தாக்குதல் நடத்திய பெருந்துயரத்தின் ஒரு வருட நிறைவு இன்றாகும்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு - கட்டுவாபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயம் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டல்களான கிங்ஸ்பேரி, ஷங்கிரிலா, சினமன் கிரேன்ட் ஆகிய ஹோட்டல்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவமானது இலங்கை வரலாற்றில் துயரத்தால் பதியப்பட்டு விட்டது.

கடந்த வருடம் 21ம் திகதி, அதாவது கிறிஸ்தவ மக்களின் ஈஸ்டர் புனித நாளன்று இத்தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருந்தனர். சர்வதேச கொடிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ் மீது ஈர்ப்புக் கொண்ட இலங்கை முஸ்லிம் இளைஞர்கள் கும்பலொன்று நீண்ட நாட்களாக திட்டமிட்டு, இவ்வாறான காட்டுமிராண்டித்தனமாக தாக்குதலை நடத்தி முடித்தது.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்களில் அப்பாவிகளான 259 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இத்தாக்குதல் சம்பவங்களில் குழந்தைகள், பெண்கள், வெளிநாட்டவர்கள் என பலரும் அகப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தமை ஆரம்ப விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இவ்விசாரணைகள் மீது நாட்டு மக்களில் பலருக்கு திருப்தி ஏற்படவில்லை. விரிவான விசாரணைகளை அன்றைய அரசாங்கம் மேற்கொள்ளவில்லையென்ற அதிருப்தி மக்கள் பலருக்கு உண்டு. இத்தாக்குதலுக்குப் பொறுப்பானோர் தண்டிக்கப்படவில்லை என்ற ஆதங்கமும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டென்பதை மறுக்க முடியாது.

தாக்குதல் நடத்தப்பட்ட நேரம் முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் ஊடாக சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். பலர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.சந்தேக நபர்களிடம் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. எனினும், அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இந்த நாடாளுமன்ற தெரிவுக் குழுவை புறக்கணித்தது. இந்த நிலையில்,பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மாஅதிபராகவிருந்த பூஜித் ஜயசுந்தர, பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, முப்படைத் தளபதிகள் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.

பாராளுமன்ற தெரிவுக்குழு ஜனாதிபதி ஒருவரிடம் விசாரணை நடத்தியது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க தவறிய குற்றச்சாட்டின் கீழ் அன்றைய பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இலங்கையில் பொலிஸ் மாஅதிபர் ஒருவர் பதவியில் இருக்கும் சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக அது பதிவாகியுள்ளது.

நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகள் நிறைவடைந்துள்ள பின்னணியில், தெரிவுக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அன்றைய அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்ட அவசரகாலச் சட்டம் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி அவசர காலச் சட்டத்தை அன்றைய ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அமுல்படுத்தியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து 4 மாதங்கள் பாராளுமன்றத்தில் நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம், நான்கு மாதங்களின் பின்னர் நீக்கப்பட்டது.

குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்ற அதேசமயம் சந்தேகநபர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பின் சகல உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வருடம் ஜுன் மாதம் 23ஆம் திகதி அறிவித்தார். பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் பிரகாரம், அனைத்து உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டதாக அப்போது அவர் சுட்டிக்காட்டினார்.

ஆனாலும் ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் மீது தங்களுக்குத் திருப்தியில்லை என்பதே நாட்டு மக்கள் பலரின் கருத்தாக இருந்தது.ஏராளமான உயிரிழப்புகளால் உண்டான துயரத்தில் இருந்த மக்களுக்கு அன்றைய அரசின் அசமந்தம் பெரிதும் வெறுப்பையே அளித்தது.

இவ்வாறான தாக்குதல் ஒன்றுக்குத் திட்டமிடப்படுவதாக முன்கூட்டியே இந்திய புலனாய்வுப் பிரிவிடமிருந்து தகவல்கள் கிடைத்த போதிலும் அன்றைய அரசாங்கம் அலட்சியமாக இருந்ததன் விளைவாகவே இத்தனை அழிவுகள் ஏற்பட்டதாக பல தரப்பிலும் இருந்து குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டன. அன்றைய அரசு மீது மக்கள் கடுமையான வெறுப்புக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் சுற்றுலாத்துறை யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மிக வேகமாக வளர்ச்சி அடைந்திருந்தது. முன்னைய 10 வருடங்களுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டே இலங்கைக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின் பிரகாரம், 2,333,796 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், அது 10.3 வீத வளர்ச்சி என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை திடீரென்று வீழ்ச்சி அடைந்தது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியினால் அரசின் வருமானம் பாதிக்கப்பட்டமை ஒருபுறமிருக்க, அத்துறையை நம்பியிருந்த பலரும் பாதிக்கப்பட்டனர். பலரின் வருமானம் பாதிக்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட நாள் முதல் சுமார் மூன்று மாதங்களுக்க இம்மக்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இலங்கைக்கு வருகை தருவதற்கே சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

''சுற்றுலாத்துறையையே நாம் முழுமையாக நம்பி இருக்கின்றோம்; வெளிநாட்டவர்கள் வந்தால் மாத்திரமே எமக்கு வருமானம். பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் வருமானம் முழுமையாக இல்லாது போயுள்ளது” என்று சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் வேதனையுடன் கூறினர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மாத்திரமன்றி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் கூட சுற்றுலா செல்வதைத் தவிர்த்திருந்தார்கள்.எங்கும் அச்சமே அன்று நிலவியது.

சுற்றுலாத்துறையின் 90 சதவீத வருமானம் மூன்று மாதங்களாக இருக்கவில்லை. வாகனங்களுக்கான குத்தகையை கூட செலுத்த முடியாத நிலைமை பலருக்கு ஏற்பட்டது. கடந்த வருடத்தின் ஜுலை மாதத்தின் பின்னரே சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

ஏப்ரல் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தமது வருமானம் முழுமையாக பாதிக்கப்பட்டதாக சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் பலரும் கூறினர்.

இவ்வாறான நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து இலங்கையின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு, இலங்கை மீண்டும் வழமைக்குக்குத் திரும்பியது. ஈஸ்டர் தின தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. தற்போது கொரோனா அச்சுறுத்தல் நிலவுகின்ற போதிலும் அத்தாக்குதல் சம்பந்தமான விசாரணைகள் புதிய கோணத்தில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுக் கொண்டு வருகின்றனர்.

அப்பாவி மக்கள் பலரின் உயிரைப் பலியெடுத்த அன்றைய காட்டுமிராண்டித்தனமான சம்பவத்தையடுத்து, இயேசு பிரான் உயிர்த்தெழுந்த தினமான கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் தினமானது உலக வாழ் அனைத்து மக்களுக்கும் துயரத்தையே நினைவுபடுத்துகின்றது. இலங்கை மக்களின் துயரம் இன்னுமே உள்ளத்தை விட்டு நீங்கவில்லை.

கொரோனா தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாத்துக் கொள்ள உலக நாடுகள் அனைத்தும் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற சந்தர்ப்பத்திலேயே கடந்த வாரம் ஈஸ்டர் தினத்தை மக்கள் தத்தமது வீடுகளில் இருந்தபடி அமைதியாகக் கொண்டாடினர். அவர்கள் அமைதிப் பிரார்த்தனைகளிலேயே ஈடுபட்டனர்.

பெருந்துயரின் ஒரு வருடம் நிறைவுற்றுள்ள இன்றைய தினத்தில், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இன்றைய தினம் சோகம் மிக்கதொரு நாளாக அமைந்திருக்கின்றது.

இலங்கையில் இடம்பெற்ற 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து, நாடு அமைதியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த தருணத்தில் யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்களின் பின்னர் இலங்கை மக்கள் மீண்டுமொரு பயங்கரவாதத் தாக்குதலை சந்தித்த சந்தர்ப்பமாக ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்கள் அமைந்திருந்தன.

குண்டுத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இன்னும் துயரத்தைச் சுமந்தபடியே நடைப்பிணமாக உலவுகின்றனர். உறவினர்களின் இழப்புகள் ஈடு செய்ய முடியாதவையாகும்.

அதேசமயம் குண்டுத் தாக்குதல்களில் படுகாயமடைந்தவர்களில் பலர் நிரந்தர ஊனமுற்று உள்ளனர். அவர்களின் நிலைமையும் பரிதாபம் நிறைந்ததாகும். ஊன்றுகோலின் உதவியுடன் பலர் இன்னும் நடமாடுகின்றனர்.

 

இந்தத் தாக்குதல் சம்பவத்தில் 400ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்ததாக விசாரணைக் குழுக்களின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அன்றைய அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதனையும் விட அதிகமென்றே தெரிகின்றது.

அதுமாத்திரமன்றி, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 40 வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழந்திருந்ததுடன், 45இற்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்திருந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு தாங்களே காரணமென்று இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹித் ஜமாத் அமைப்பு அன்று பொறுப்புக் கூறியிருந்தது.

அதன் தலைவராக செயற்பட்ட சஹரான் ஹாசிம் தலைமையில் இந்த பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை விசாரணைகள் ஊடாக தெரியவந்திருந்தது.

இன்றைய தினம் இலங்கையில் வாழும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமன்றி மனித நேயம் கொண்ட அனைத்து மக்களுக்கும் துயரத்தை நினைவுபடுத்தும் நாளாகும்.

இன்று காலை 8.40 இற்கு அனைத்துத் தேவாலயங்களிலும் மணிகளை ஒலிக்கச் செய்யுமாறு பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இன்று காலை 8.45 இற்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறும் பேராயர் கேட்டுக் கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான மக்களுக்காக வழிபாடு நடத்துமாறு பௌத்த மக்களின் மதஉயர்பீடமான மல்வத்தை பீடமும் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாளில் நாம் அனைவரும் அமைதிப் பிரார்த்தனையில் ஈடுபடுவோம். உறவுகளை இழந்த மக்களின் வேதனையில் நாமும் பங்கு கொள்வோம்.


Add new comment

Or log in with...