இரசாயன பசளை, பீடை நாசினிகள்பயன்படுத்தாத இயற்கை விவசாயம்

கிழக்கில் 3000 ஏக்கரில்ஆளுநர் வகுக்கும் திட்டம்

கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் பெரும்போகத்தில் 3000 ஏக்கரில் சேதன நெல் உற்பத்தி (இயற்கை விவசாயம்) செய்யப்படுவதற்காக விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும்¸ இம்முயற்சியானது பலவிதமான தொற்றா நோய்களிலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற பெரிதும் உதவும் எனவும் தெரிவித்து, கிழக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு மகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் பணிப்புரை விடுத்துள்ளார்

இதுபற்றி ஊடகங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா ஜகம்பத் கருத்து வெளியிடுகையில், “கிழக்கு மாகாணம் விவசாயத்திற்குப் பெயர் பெற்றது. அதிலும் நெற்செய்கை இங்கு அமோக விளைச்சலைத் தருகிறது. ஒரு ஹெக்டேயருக்கான நெல் உற்பத்தி இப்போது 4.5 மெட்ரிக் தொன்னாக இருக்கிறது. இதை இன்னும் உயர்த்த வேண்டும் அப்போதுதான் விவசாயிகள் இலாபமடைய முடியும். சேதன நெல் உற்பத்தியையும் இந்த நிலைக்கு உயர்த்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

“இதேநேரத்தில் உற்பத்தி செய்யப்படும் நெல் தரம் வாய்ந்ததாக இருக்கவும் வேண்டும். இரசாயனப் பசளையும், கிருமிநாசினிகளும் கலந்து வேளாண்மை செய்வதால் நெல் உற்பத்தியில் அது பாதகமான தாக்கத்தைச் செலுத்துகிறது. எமது மக்கள் இரசாயன நச்சுப் பொருட்கள் கலந்த உணவுகளையே உண்ண வேண்டியிருக்கிறது. இது தொற்றாநோய்களுக்கு வழியேற்படுத்துகின்றது. இதனால் நாடெங்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறான ஆபத்துகளை தவிர்ப்பதே எமது நோக்கம்.

இரசாயனக் கலப்பற்ற¸ சேதன நெல் உற்பத்தியில் உடனடியாக விவசாயிகளை ஈடுபடுத்த முடியாது. அவர்களின் மனோநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால் ஏற்படும் நன்மைகளை அவர்களுக்கு புகட்ட வேண்டும். மக்ககளுக்கு ஏற்படுகின்ற பாதிப்பை நமது அதிகாரிகள் விவசாயிகளின் மத்தியில் எடுத்துரைக்க வேண்டும்.

இதற்காகவே ஆரம்பத்தில் ஒரு மாவட்டத்திற்கு 1000 ஏக்கர் சேதன நெல் உற்பத்தியில் ஈடுபடுமாறு என்னால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருமலை மாவட்டத்தில் இதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக மட்டக்களப்பு¸ அம்பாறை மாவட்டங்களில் இத்திட்டம் விரைவாக ஆரம்பிக்கப்படும்”என்றார் கிழக்கு மாகாண ஆளுநர்.

எஸ்.எஸ்.தவபாலன்
புளியந்தீவு குறூப் நிருபர்

 


There is 1 Comment

Pidi nasinigalinal thiingugal

Add new comment

Or log in with...