பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; வர்த்தமானி வெளியீடு (UPDATE)

பொதுத் தேர்தல் ஜூன் 20, சனிக்கிழமை; ஆணைக்குழு தீர்மானம்!-EC Decided to Hold General Election on June 20-Mahinda Deshapriya

அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி, சனிக்கிழமை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று (20) பிற்பகல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் கூடிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.

மிக நீண்ட கலந்துரையாடலின் பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியொன்றும் (இல 2172/03) வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலை ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவ ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி நிறைவடைந்த வேட்பு மனுத் தாக்கலை அடுத்து, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக மிகத் தீர்க்கமான முடிவொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, தேர்தல் திகதி தொடர்பில் உச்சநீதிமன்றை நாடுமாறு ஜனாதிபதியை, தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருந்தது.

இந்நிலையில், தேர்தல் தினம் தொடர்பில் முடிவொன்றை எடுக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருப்பதால் உச்ச நீதிமன்றை நாட வேண்டிய அவசியம் இல்லை என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், தேர்தலை காலவரையறையின்றி ஒத்திப்போடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினாலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 28ஆம் திகதி தேர்தலை நடாத்துவதற்கு, ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவினால் முன்வைக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்பட்டதாகவும், அதனை ஏற்க முடியாமை தொடர்பில் 7 காரணங்களை முன்வைத்து, ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான ரத்னஜீவன் ஹூல் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

அத்துடன், இன்று (20) காலை இது தொடர்பில் தனது பேஸ்புக் கணக்கில் பதிவொன்றை வெளியிட்ட, மஹிந்த தேசப்பிரிய தேர்தல் போட்டி சமதளத்தில் இடம்பெற வேண்டும் என்பது தொடர்பில் இன்று (20) இடம்பெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

8.52pm

தேர்தல் தினம் தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல்

PDF File: 

Add new comment

Or log in with...