தேர்தலை மே 25 - 28 நடாத்துவதற்கான சாத்தியம் குறைவு!

தேர்தலை மே 25 - 28 நடாத்துவதற்கான சாத்தியம் குறைவு!-No Possibilities to Hold General Election Between May 25-28

- நாட்டின் இயல்பு நிலை மோசம்
- வார இறுதியில் ஜனாதிபதியை சந்திப்போம்

பொதுத் தேர்தலை நடத்தும் திகதி குறித்து தன்னால் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய இறுதிக் கட்டமான மே மாதம் 25 அல்லது 28ஆம் திகதிகளில் ஏதாவது தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்க்க முடியாது இருப்பதாகவும் கூறினார்.

கொரோனா நெருக்கடியிலிருந்து நாடு இன்னமும் விடுபடவில்லை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் நிலையில் நாட்டின் இயல்பு நிலை மோசமடைந்துள்ளது. எனினும் தேர்தலை மே மாத இறுதிக்குள் நடத்த முடியாது போனால் ஜூன் மாதம் 02ஆம் திகதி புதிய பாராளுமன்றம் கூட முடியாத போகலாம். இது விடயத்தில் உரிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியை தாம் வலியுறுத்தியுள்ளோம்.

இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் உள்ளது எனினும் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அவ்வாறாயின் மே மாத இறுதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு உரிய வாய்ப்பு ஒன்றை அரசு எதிர்பார்க்கின்றதா என்று எண்ண வேண்டியுள்ளது.

ஜனாதிபதியிடம் இருந்து கிடைக்கக்கூடிய உத்தரவுக்கமைய தேர்தல் ஆணைக்குழு கூடி ஆராய்ந்து முடிவுன்றை  எடுப்போம். உரிய காலக் கெடு முடியும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதில் பெரும் சட்டச் சிக்கல் ஏற்படலாம் என ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

இந்த வார இறுதிக்குள் ஆணைக்குழு ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து கலந்துரையாட எண்ணி இருப்பதாகவும் அடுத்து அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்


Add new comment

Or log in with...