பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் ஏப்ரல் 30 வரை நீடிப்பு

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் ஏப்ரல் 30 வரை நீடிப்பு-Temporary Suspension of SriLankan Airlines Scheduled Flights Extended Till Apr 30

சரக்கு விமானங்கள் சேவையில்; தேவையேற்படும் போது விசேட விமானங்கள் செயற்படும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீ லங்கன் விமான சேவையானது, தனது விமான பயண சேவை தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை மேலும் நீடிப்பதாக அறிவித்துள்ளது.

நேர அட்டவணைக்கு இயங்கும் பயணிகள் விமான சேவை தற்காலிக இடைநிறுத்தமானது, இம்மாதம் 21ஆம் திகதி வரை இடைநிறுத்தி வைக்கப்படுவதாக அந்நிறுவனம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, தமது விமான சேவைகள் செயல்படும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த தற்காலிகமாக பயண சேவை இடைநிறுத்தத்தை மேற்கொள்ள தாம் நிர்பந்திக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயினும், எயார்லைன்ஸின் சரக்கு சேவை விமானங்கள் அதன் உலகளாவிய வலையமைப்புடன் தொடர்ந்தும் இடம்பெறும் என்பதோடு, தேவைப்படும் போது விசேட விமானங்களும் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் இது தொடர்பான தகவல்களை www.srilankan.com இலும் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிக அளவு கேள்விகள் காரணமாக, தமது வாடிக்கையாளர் சேவை முகவர்களை தொடர்பு கொள்வதில் வழக்கத்தை விட அதிக நேரம் எடுக்கலாம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானசேவை நிலைமைகள் மற்றும் பல்வேறு மட்டங்களாலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்து இது தொடர்பிலான மறு அறிவிப்பை வெளியிடும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...