தனித்து இருப்போம்... விழித்து இருப்போம்...

கொரோனா... 4 மாதத்திற்கு முன்பு வரை இந்த பெயர் யாருக்கும் தெரியாது. இப்போது பட்டி தொட்டி முதல் உலக நாடுகள் வரை அனைத்து மக்களையும் ஆட்டி படைக்கிறது. கண்ணுக்கு தெரியாத இந்த வைரஸ், அரசன் முதல் ஆண்டி வரை பாகுபாடும் பார்க்காமல் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் 4 மாதங்களுக்கு முன்பு தோன்றிய இந்த வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவி மக்களை பாடாய் படுத்துகிறது. இன்னும் எத்தனை உயிரை காவு கொள்ளக் காத்திருக்கிறதோ என்ற அச்சம் உலக மக்களிடையே நிலவுகிறது. வல்லரசு நாடுகளெல்லாம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது.

கொத்து, கொத்தாக உயிரை பறிக்கும் இவ்வைரஸை அழிக்க மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் இந்த வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மட்டுமே முடியும் என்பது உலகம் அறிந்த உண்மை. அதுவும் ஒவ்வொரு வரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதுதான் அதற்கான வழி. இந்த கொடிய வைரஸை இப்போதைக்கு வீழ்த்தும் பொறுப்பு மக்கள் கையில் தான் உள்ளது. அதாவது கீழ்க்கண்ட வழிமுறைகளைக் கடைபிடிக்கும்  கொரோனாவை வெல்ல முடியும். அதாவது,

* வீடுகளில் தனித்திருக்க வேண்டும்.

* சளி, காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

* சவர்க்காரம் அல்லது கைகழுவும் திரவம் கொண்டு கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.

* முக கவசம் அணிய வேண்டும்.

* சமூக இடைவெளியைக் கடைபிடிக்கும் விதியைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

* நோய் தொற்று இருக்கும் பகுதிக்குள் செல்லக்கூடாது.

கொரோனாவுக்கு எதிராக அரசாங்கமும் மருத்துவ துறையினரும் வழங்கும் அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களைக் கடைபிடித்து அவற்றுக்கு உச்ச  ஒத்துழைப்பை நல்குவோம். அதன் மூலம் கொரோனாவை வீழ்த்தலாம். ஆகவே வீதிகளுக்கு செல்வதை தவிர்ப்போம், வீட்டில் இருப்போம், விலகி இருப்போம், விழித்து இருப்போம், கொரோனாவை வெல்வோம் என சபதம் ஏற்போம். மற்ற நாடுகளை விட நமக்கு பாதிப்பு குறைவு என்றாலும், இனிமேல்தான் கொரோனா வைரஸின் தாக்கம் உச்சத்துக்கு செல்லும் என்று கூறப்படுவதால் வரும் காலங்களில் விழிப்புடன் செயல்பட்டு, கொரோனாவை வெல்வோம்!

ருத்ர தாண்டவம் ஆடும் ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 13 லட்சம் பேரை தாக்கி உள்ளது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவு கொண்டிருப்பது தெரிந்ததே. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவரை இவ்வைரஸ் தாக்கினால், அவரை காப்பாற்றுவது கடினமாக இருப்பதாக மருத்துவ ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு மற்றும் பானங்களைப் பருகுவது பயன்மிக்கதாக இருக்கும்.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...