கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் சிலவற்றை கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியம் வழங்கி வைத்துள்ளது.

ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தலைமையிலான குழுவினரால் இன்று (10) கல்முனை வடக்கு வைத்தியசாலை  வைத்திய அதியட்சகர் ஆர்.முரளீஸ்வரனிடம்  பெறுமதியான இந்த உபகரணங்கள் ஒப்படைக்கப்பட்டன.

கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்ற சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் உயர்பாதுகாப்பு கருதி இந்த உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கல்முனை - கனடா  நண்பர்கள் நட்புறவு ஒன்றியத்தினால்  முதல் கட்டமாக  அவசர உதவியாக இவ்வைத்தியசாலைக்கு  இந்த உதவியை வழங்கியதாகவும்   கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் மேலும் பல வைத்திய உதவிகளையும் வழங்கவுள்ளதாகவும்  ஒன்றியத்தின் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதன் தெரிவித்தார் .

இந்த அசாதாரண சூழலில்  பொது மக்களின் நலன் கருதி எமது வைத்தியசாலைக்கு அவசியமான  தேவையாக கருதப்பட்ட வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தக்கூடிய வைத்திய உபகரணங்களை எம்மை தேடி வந்து வழங்கிய கல்முனை - கனடா நண்பர்கள் நட்புறவு ஒன்றியத்திற்கும் அதன் தலைவி டொக்டர் புஷ்பலதா லோகநாதனுக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.

நற்பிட்டிமுனை விசேட நிருபர்


Add new comment

Or log in with...