தனிமைப்படுத்தப்பட்ட 3,459 பேர் வெளியேற்றம்; 1,311 பேர் கண்காணிப்பில் | தினகரன்


தனிமைப்படுத்தப்பட்ட 3,459 பேர் வெளியேற்றம்; 1,311 பேர் கண்காணிப்பில்

தனிமைப்படுத்தப்பட்ட 3,459 பேர் வெளியேற்றம்; 1,311 பேர் கண்காணிப்பில்-3459 Left Home From Quarantine Centers-1311 Under Observation

முப்படையினரின் கட்டுப்பாட்டிலிருக்கும் தனிமைப்படுத்தல் முகாம்களில் 1,311 பேர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா ஒழிப்பு தேசிய செயல்பாட்டு மத்திய நிலையம் நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் 28 நாட்கள் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்துக்கொண்டு 37 பேர் நேற்று தமது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இவர்களுடன் இக்கட்டடத்தில் இருந்து ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமையால் 37 பேருக்கும் இரண்டு முறை பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் 3,459 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டை முடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர். 1,311 தொடர்ந்து இந்த முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரத்தினபுரியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மூன்று பேர் அடையாளம் காணப்பட்டமையின் பிரகாரம், இப் பிரதேசத்தில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் தியத்தலாவ தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

அட்டுலுகம மற்றும் அக்குறனை பிரதேசங்கள் இன்னமும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாகவே உள்ளன. புத்தளம் பிரதேசத்தில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவர் அடையாளங்காணப்பட்டிருந்தார். இவர் புத்தளம் தாராபுறம் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மரணச் சடங்களில் கலந்துகொண்டுள்ளார். இங்கு பலர் வருகைதந்துள்ளனர். இக் கிராமத்தில் 900 குடும்பங்களைச் சேர்ந்த 4,600 பேர் வாழ்கின்றனர். இவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த முடியாது என்பதால் இக் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்றார். 


Add new comment

Or log in with...