ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்

ஏப். 08 - 21 வரை அனைத்து விமானங்களும் நிறுத்தம்-SriLankan Airline Temporarily Suspend all Flights-April 08-April 21

சரக்கு விமானங்கள் சேவையில்; தேவையேற்படும் போது விசேட விமானங்கள் செயற்படும்

கொரோனா பரவலை தடுக்கும் வகையில், ஶ்ரீ லங்கன் விமான சேவையானது, ஏப்ரல் 08 முதல் 21ஆம் திகதி வரை தனது அனைத்து பயணிகள் விமான சேவைகளையம் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

அறிவித்தலொன்றை விடுத்துள்ள ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது சேவைகள் செயல்படும் இடங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, 2020 ஏப்ரல் 08 முதல் 2020 ஏப்ரல் 21 வரை தனது அனைத்து பயணிகள் விமானங்களையும் இடைநிறுத்தி வைக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதோடு, இதனை பயணிகளுக்கு தெரிவிப்பதில் மிகவும் வருந்துகிறோம்.

எயார்லைன்ஸ் தொடர்ந்து விமானசேவை நிலைமைகள் மற்றும் பல்வேறு மட்டங்களாலும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர்ந்தும் மறுஆய்வு செய்து வருவதோடு, இதுபோன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் முன்னறிவித்தலுடன் எதிர்வரும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்பே அதன் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தயாராக உள்ளது.

தேவைப்படுமானால், நாடு திரும்ப விரும்பும் இலங்கையர்களுக்காக இக்காலகட்டத்தில் விசேட விமானங்களை இயக்க விமான நிறுவனம் தயாராக உள்ளது.

ஆயினும், எயார்லைன்ஸின் சரக்கு சேவை விமானங்கள் அதன் உலகளாவிய வலையமைப்புடன் இடம்பெறும் என்பதோடு, தேவைப்படும் போது விசேட விமானங்களும் தொடர்ந்து இயங்கும்.

விமான நிறுவனம் அதன் நான்கு தசாப்த காலப்பகுதியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், இது உலகெங்கிலும் உள்ள அனைத்து விமான சேவை வழங்குனர்களாலும் எதிர்கொண்டுள்ள மிகக் கடினமான மற்றும் துரதிர்ஷ்டவசமான காலமாகும்.

எயார்லைன்ஸின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இந்த சூழ்நிலைகளில் சிரமத்திற்குள்ளான அதன் மதிப்புமிக்க பயணிகளுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்கும் நோக்கில், மீள் பதிவு மற்றும் மீள வெளியீடு கொள்கையை செயல்படுத்தியுள்ளது, இச்சேவையை www.srilankan.com இல் பெறலாம்.

மேலதிக தகவல்களுக்கும் விளக்கங்களுக்கும் பயணிகள் தங்களது பயண முகவர்கள், அருகிலுள்ள இலங்கை எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது எயார்லைன்ஸின் உலகளாவிய தொடர்பு மையத்தை +94117771979 எனும் தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடந்த காலத்திலும், தொற்றுநோய் பரவ ஆரம்பத்திலிருந்து, ஒரு தேசிய விமான சேவை வழங்குனராகு தனது கடமையை நிறைவேற்றி வருவதன் மூலம் சக இலங்கையர் அவர்களது வீடுகளுக்கு செல்வதற்கும், மருத்துவ உதவி போன்ற அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதற்குமான பணிகளை செய்து வருகிறது. அத்துடன் நாட்டின் தேவை கருதி எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியையும் வழிநடத்த விமான நிறுவனம் முழுமையாக தயாராக உள்ளது. அதன் மூலம் COVID 19 ஐ எதிர்த்து போராடும் இலங்கையின் முயற்சிகளில் அது பங்கு வகிக்கின்றது.

நிலவும் இருண்ட காலத்திலிருந்து மீண்டு, விமான நிறுவனம் தனது பயணிகளுக்கு மறக்கமுடியாத மற்றும் புதிய பயண அனுபவத்தை வழங்க, விரைவில் சேவைகளை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்பார்க்கின்றது.


Add new comment

Or log in with...