துறைமுகத்திற்கு வரும் கப்பல்களுக்கு கட்டண விலக்களிப்பு

துறைமுக சேவைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கு மேலும் பல நிவாரணங்கள்

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் நாட்டின் துறைமுகங்ளுக்கு வரும் கப்பல்களுக்கு தேவையான வசதிகளை தாமதமின்றி வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதன்படி அனைத்து கப்பல்களுக்கும் தாமத கட்டணம், உள்நுளைவு கட்டணங்களை செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார்.

அனைத்து துறைமுக நெறிப்படுத்தலுடன் தொடர்புடைய சேவைகளை வழமையான ஒழுங்கில் பேணுவதற்கு மேலும் பல நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஏற்றுமதி, இறக்குமதி நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு தேவையான நிவாரணங்களை உரிய வர்த்தக சமூகத்தினருக்கு துறைமுக வளாகத்திலேயே வழங்குவதற்கு இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை சுங்கம், கொழும்பு துறைமுகத்தில் செயற்படும் துறைமுக அதிகாரசபையின் முனையங்களான (JCT/UCT), CICT) மற்றும் SAGT தனியார் கம்பனியின் கீழ் நிர்வகிக்கப்படும் முனையங்கள் இதற்காக இணைந்து செயற்படுகின்றன. அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய வகையில் வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக தெரிவித்தார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் துறைமுக வளாகத்தில் பொருட்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இறக்குமதி கொள்கலன்கள், கப்பல் சரக்குகள் மற்றும் இறக்குமதி வெற்று கொள்கலன்களுக்காக அறவிடப்படும் வளாக கட்டணம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

துறைமுக போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் ட்ரக், லொறி, டிபர், பவுசர் வண்டிகள் மற்றும் முகவர் நிறுவனங்களின் பொது/ தனியார் வாகனங்கள் (வேன், கார், மோட்டார் சைக்கில்களுக்காக) துறைமுக வளாகத்திற்குள் அந்த முகவர் நிறுவனங்கள், கம்பனிகள் தற்போது பெற்றுக்கொண்டுள்ள துறைமுக நுழைவு அனுமதிப் பத்திரம்/ தனிப்பட்ட நுழைவு அனுமதிப் பத்திரங்களும் ஊரடங்கு சட்ட காலப்பகுதியிலும் செல்லுபடியாகும்.

துறைமுக பணிகளில் ஈடுபட்டுள்ள தனியார் துறையின் அத்தியாவசிய ஊழியர்களுக்காக ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் பயணம் செய்வதற்கான அனுமதிப்பத்திரம் இலங்கை துறைமுக அதிகார சபையின் சிபாரிசுடன் இலங்கை பொலிஸினால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தினுள் செயற்படும் முனைய சேவைகள், முனையங்களுக்கிடையிலான சேவைகளில் ஈடுபட்டுள்ள கொள்கலன் / பொருட்களை ஏற்றி இறக்கும் போக்குவரத்து வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் கட்டணம் செலுத்தும் அடிப்படையில் இலங்கை துறைமுக அதிகார சபையின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இலங்கை துறைமுக அதிகார சபையில் தொடர்ச்சியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் சுகாதாரப் பாதுகாப்பு, துப்பரவு சேவைகள், நலன் பேணல் வசதிகள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட வழிகளின் ஊடாக போக்குவரத்து வசதிகள் என்பவற்றையும் அதிகபட்சம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...