யாழ்., முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா; ஊரடங்கு செவ்வாய் மு.ப. 6 வரை நீடிப்பு

யாழ்., முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா; ஊரடங்கு செவ்வாய் மு.ப. 6 வரை நீடிப்பு-Curfew Extended to 5 Districts in Northern Province-Jaffna, Mullaitivu, Kilinochchi, Vavuniya, Mannar

- பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்
- வடக்கின் 5 மாவட்ட மக்களும் வெளி மாவட்டங்களுக்கு செல்ல தடை
- சுவிஸ் மதகுருவுடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காணும் வரை நடைமுறை

வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (24) காலை 6.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டங்களில் காலை 6.00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் அன்றையதினம் பிற்பகல் 2.00 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

வடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்களும், தாங்கள் வாழும் மாவட்டங்களுக்கு வெளியே பயணம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

கடந்த தினங்களில் வடக்கிற்கு பயணம் செய்த சுவிட்சர்லாந்தில் இருந்து வருகை தந்த கொரோனா வைரஸ் தொற்றுடைய மதகுருவை  சந்தித்த மற்றும் அவருடன் தொடர்புகொண்ட அனைவரையும் அடையாளம் காணும் வரை இந்த பயணத் தடை நடைமுறையில் இருக்கும்.

ஐந்து மாவட்டங்களிலும் வசிக்கும் மக்கள் கொரோனா தாக்கத்திற்கு உற்படுவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கின் மக்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்பாட்டினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அரசாங்கம் அங்கு வாழும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஏற்கனவே, கொழும்பு, கம்பஹா மற்றும் புத்தளம் மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மார்ச் 24 செவ்வாய் காலை 6.00 மணி வரை நீடிக்கப்பட்டு, அன்றைய தினம் அதாவது செவ்வாய்க்கிழமை (24)  பிற்பகல் 2.00 மணிக்கு அம்மாவட்டங்களில் மீண்டும் அமுல்படுத்தப்படும் என, நேற்று (21) அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் நாளை (23) காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன், மீண்டும் நாளை (23) பிற்பகல் 2.00 மணி முதல் அமுல்படுத்தப்படும்.

அனைத்து பிரதேசங்களிலும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் செவ்வாய் (24) காலை 6.00 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...