ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வெளியே செல்லுங்கள் | தினகரன்


ஊரடங்கு தளர்த்தப்படும்போது அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வெளியே செல்லுங்கள்

ஊரடங்கு தளர்த்தப்படும் வேளைகளில் அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டுக்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் மீண்டும் வீட்டுக்குச் செல்லுங்கள் என சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரம்பலைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்களின் வகிபாகம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

ஊரடங்கு நேரத்தில் வைத்தியசாலை,சுகாதாரத் திணைக்களம்,பிரதேச செயலகம், மாகாணசபை, பிரதேசசபை, நீர்ப்பாசனத் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்களில் பணி புரிவோர் தமது பணி அடையாள அட்டையுடன் பணி விடயமாக வெளியே செல்ல முடியும்.அத்துடன் வெளிநாட்டவர்கள் விமான நிலையம் சென்று வரவும் விசேட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதனைத் தவிர சதொச நிறுவன வாகனங்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விசேடமாக விவசாயத்தில் ஈடுபடுவோர் மற்றும் ஆலய பூசகர்களுக்கும் ஊரடங்கு நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தினப் பூஜைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் மக்கள் ஒன்றுகூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அத்தியாவசியத் தேவைகள் எதுவும் இன்றி ஊரடங்கு நேரத்தில் வெளியே நடமாடினால் கைது செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்துவதன் நோக்கமும் கொரோனா பரவலைத் தடுக்கவே. அதனை பொதுமக்கள் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் ஊரடங்கு தளர்த்தப்படும் நேரங்களிலும் வீட்டை விட்டு வெளியே செல்வதனைத் தவிர்க்க வேண்டும். அத்தியாவசியத் தேவை இருந்தால் மாத்திரம் வீட்டிற்கு ஒருவர் வெளியே சென்று தேவை முடிந்தவுடன் வீடுகளுக்கு செல்லுங்கள். ஊரடங்கு தளர்த்தப்படும் வேளையில் அதிக சன நெரிசல் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 (த.சுபேசன் - சரசாலை நிருபர்)


There is 1 Comment

V. Good

Add new comment

Or log in with...