தேச மக்கள் ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டிய சவால்!

கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையிலும் அதிகரித்துள்ளது. இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 52 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எமது தேசத்துக்கு பெரும் சவாலாகவே காணப்படுகிறது. இச்சவாலை எதிர்கொண்டு மீட்சி பெற எம்மால் முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் போது நம்பிக்கை வெளிப்படுத்தியிருக்கின்றார். இதன் போது அவர் மிக முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கின்றார். மக்கள் மத்தியில் அநாவசியமான அச்சத்தை ஏற்படுத்த வேண்டாமென்பதே அந்த வேண்டுகோளாகும்.

நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் மிகத் துணிச்சலுடன் ஜனாதிபதி எடுத்து வரும் நடவடிக்கையை குறைத்து மதிப்பிட முடியாது. ஐரோப்பிய நாடுகள் கூட எண்ணிப் பார்க்காத ஒரு விடயத்தை முதன் முதலாக கையாண்டுள்ளது இலங்கை. நோய்த் தொற்று சந்தேகத்துக்கு உள்ளானோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை இலங்கை துணிச்சலுடன் ஆரம்பித்துள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதற்கு இடமளிக்காமல் சவால் நிறைந்த இந்த காலகட்டத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். பொறுப்பு என்பது யாரும் சொல்லித் தெரிய வேண்டியதொன்றல்ல. நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் இந்தப் பொறுப்பு இருக்க வேண்டியது அவசியமாகும். இந்தப் பேரனர்த்தத்திலிருந்து தேசத்தை மீட்டெடுப்பதற்காக எம்மீதிருக்கும் கடப்பாட்டையும், பொறுப்பையம் சரியாக நிறைவேற்ற ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். சகல விதத்திலும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டியது ஒவ்வொருவரும் கட்டாய கடப்பாடாகும் என்பதை உணர வேண்டும்.

மக்களுக்கு தான் வழங்கிய வாக்குறுதிகளோடு எனது பணிகளை மட்டுப்படுத்திக் கொள்ளப் போவதில்லை எனவும் நாட்டையும், மக்களையும் பாதுகாத்து உறுதிமிக்கதான தேசத்தை கட்டியெழுப்புவதற்காக உறுதி பூண்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். இதனை எவராலும் தனித்து நின்று செயற்படுத்த முடியாது. கூட்டு ஒத்துழைப்பு மிக முக்கியமானதாகும். கட்சி அரசியல், இன மத மொழி பேதங்களற்ற இலங்கையர்கள் என்ற அடிப்படையில் நாமனைவரும் ஒன்றுபட்டு ஒத்துழைத்துச் செயற்பட முன்வர வேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்பை யதார்த்தபூர்வமானதாகவே கருத வேண்டியுள்ளது.

அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடாதவிடத்து அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். அனைவரின் மீதும் அவதானத்தை செலுத்தியே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 16ஆம் திகதி நாம் பெற்ற வெற்றியின் பின்னர் அதிகாரம் குறைந்த அரசாங்கம் ஒன்றை எம்மால் உருவாக்க முடிந்தது. நான் பதவிக்கு வரும் போது கடந்த அரசாங்கத்தின் மூலம் வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. நாடு இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது.

பல்வேறு அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதி பெற்றிருக்கவில்லை. உரம், மருந்து வகைகள், உணவு வழங்குனர்கள் மற்றும் நிர்மாணத்துறையினருக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. நாம் இதற்காக இடைக்கால நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக் கொள்ள முயற்சி எடுத்தோம். அதற்கு எதிர்க் கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலைமையின் கீழ் நான் உங்களுக்கு வாக்களித்த பொறுப்புகளை நிறைவேற்ற முடியாமல் போனது. அதிகாரம் குறைந்த அரசாங்கத்தினால் இந்நிதியை பாராளுமன்றத்தில் முன்வைத்து அனுமதியைப் பெற முடியாது.

அதனால் தான் எனக்குக் கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தைக் கலைத்து உறுதியான புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக தேர்தலை நடத்த உத்தேசித்தோம்.

பாராளுமன்றத்தைக் கலைத்ததுடன், அரசியலமைப்பின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்திற்கமைய நான் இடைக்கால நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்தேன். அதன்படி அத்தியாவசிய செலவுகளுக்காக நிதிக் கொடுப்பனவுகள் வழங்க ஆரம்பித்தோம். அதனாலேயே தான் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கும் எம்மால் முடியுமாகவிருந்தது.

ஜனாதிபதி தான் எதிர்கொண்ட சவால்கள், நெருக்கடிகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் முன்வைத்திருக்கும் நிலையில், சில அரசியல் சக்திகள் அதனை குறுகிய அரசியல் கண் கொண்டு விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. ஜனாதிபதியின் உரையை முற்றுமுழுதாக அரசியல்மயமாக்க முயற்சிப்பது தவறான சித்தனையாகும். ஜனநாயக அரசியலில் விமர்சிக்கும் உரிமை உண்டு. ஆனால் சேறுபூசும் கலாசாரத்தை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. மக்களை தவறாக வழிநடத்துவதை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது.

தலைவர்கள் ஜனநாயகப் பண்புகளைப் பேணும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். ஜனாதிபதியின் உரையை முன்னாள் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து சேறுபூசும் விதத்தில் கருத்துக் கூறியிருப்பது அரசியல் தலைமைக்குப் பொருத்தமானதல்ல. இது கவலை தரக் கூடியதாகும். ஜனநாயக அரசியலில் கனவான் தன்மை பேணப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றோம். பேரிடர் எதிர்நோக்கப்படும் இந்த வேளையில் பொறுப்புடன் செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்குவதே முக்கியமானதாகும்.

இத்தகைய நல்லெண்ணத்துடன் அனைவரும் ஒன்றுபட்டு இன்றைய பேராபத்திலிருந்து தேசத்தைக் காப்பாற்றி மீட்டெடுப்பதற்காக முழுமையான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென வினயமாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...