கொரோனா சோதனை கடும் நிபந்தனைகளுடன் தனியார் வைத்தியசாலைகளில்

கொரோனா சோதனை கடும் நிபந்தனைகளுடன் தனியார் வைத்தியசாலைகளில்-Allowed to Do PCR Test in Private Hospitals With Strict Conditions-Anil Jasinghe

கட்டணம் ரூ. 6,000 இற்கு குறைவாக இருக்க வேண்டும்

தனியார் துறை மருத்துவமனைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க ​​தெரிவித்தார்.

இன்று (18) ராஜகிரியவில் உள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு தனியார் மருத்துவமனைகளல் கடுமையான நிபந்தனைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

PCR சோதனை செய்வது தொடர்பிலான தனியார் வைத்தியசாலைகளுக்கான நிபந்தனைகள்
1. குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்து அதன் பின்னரே இச்சோதனையை மேற்கொள்ள வேண்டும்.
2. கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் காணப்படும் நோயாளிகளுக்கு மாத்திரமே மேற்கொள்ள வேண்டும்
(இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொருள் கோடல்களுக்கு அமைய)
3. சோதனைகளுக்கு முன்னர், குறித்த நபரின் தகவல்கள் அனைத்தும் தொற்று நோய் ஆய்வு நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும்
4. குறித்த சோதனையின் முடிவு ஆம் அல்லது இல்லை என எதுவாக இருந்தாலும் அதனையும் தொற்று நோய் ஆய்வு நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும்
5. இச்சோதனைகளை மேற்கொள்வதாயின் 24 மணித்தியாலங்களுக்குள் அதன் முடிவுகள் வழங்கப்பட வேண்டும்.
6. வைரஸ் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் இதனை பொறுப்பேற்க வேண்டும்.
7. இந்நிபந்தனைகளை பின்பற்றாவிடின் அத்தனியார் வைத்தியாலைக்கு அதனை மேற்கொள்வதற்கான அனுமதி நிறுத்தப்படும்.
8. ரூ. 6,000 இற்கு குறைவான கட்டணத்தில் இதனை மேற்கொள்ள வேண்டும்.

அத்துடன், தனியார் துறையினருக்கு அரச ஆய்வுகூடங்களைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு ரூ .6,000 கட்டணம் செலுத்தி, குறித்த நபரின் சளி இழையத்தை வழங்கி சோதனையை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

தற்போது, PCR பரிசோதனைகள் கொழும்பு வைத்திய ஆய்வுகூடம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், கராபிட்டி போதனா வைத்தியசாலை, கண்டி தேசிய வைத்தியசாலை, அநுராதபுர போதனா வைத்தியசாலை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இன்னும் சில வைத்தியசாலைகளிலும் இதனை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...