ஒருங்கிணைந்த நடவடிக்கைகளால் 'கொரோனா'வை தடுக்க வேண்டும்

சார்க் தலைவர்களின் வீடியோ கொன்பரன்ஸில் மோடி

''தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகள், ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம், 'கொரோனா' வைரஸ் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில், அவசரகால நிதியத்தை உருவாக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி பேசினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, 'சார்க்' எனப்படும், தெற்காசிய பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலைதீவு அதிபர் இப்ராகிம் முகமது சாலிஹ், நேபாள பிரதமர் சர்மா ஒலி, பூட்டான் பிரதமர் லோடே ட்செரிங், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி உள்ளிட்ட தலைவர்களுடன் 'வீடியோ கொன்பரன்ஸ்' வழியாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் கலந்துரையாடினார்.

இதில், பிரதமர் பேசியதாவது: கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவி வருகிறது. தெற்காசிய பிராந்தியத்தில், இந்த வைரஸ் பரவாமல் தடுக்க பல முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வைரஸ் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளும் தயாராக இருக்க வேண்டும். இதற்கு ஒருங்கிணைந்த செயல்பாடுகள், நடைமுறைகள் அவசியம். ஒரு சில நாடுகள் மட்டும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால் போதாது; அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

தெற்காசிய கூட்டமைப்பு நாடுகளில், 150க்கும் குறைவான நபர்களுக்கு மட்டுமே வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 'தயாராக இருக்க வேண்டும்; பதற்றம் கூடாது' என்பதே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான எங்கள் தாரக மந்திரம்.

ஜனவரி மாதத்திலிருந்து, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் அனைத்து பயணியருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்வதை படிப்படியாக தடை செய்து உள்ளோம். நோய் பாதிப்புள்ள வெளிநாடுகளில் இருந்த 1,400 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பை தடுப்பதற்காக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளும் நோய் பாதிப்புள்ள நாடுகளில் வசிக்கும், தங்கள் குடிமக்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக, அவசரகால நிதியத்தை அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் எங்கள் பங்காக முதல் கட்டமாக 74 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். பாகிஸ்தான் சார்பில் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளரும் சுகாதாரத் துறை செயலருமான ஜபர் மிர்ஸா பங்கேற்றார்.


Add new comment

Or log in with...