பயணங்களை தவிர்க்கவும்; குடிவரவு திணைக்களம் வர வேண்டாம்

பயணங்களை தவிர்க்கவும்; குடிவரவு திணைக்களம் வர வேண்டாம்-All Travel Limited-Travel from UK-Belgium-Norway Banned

ஐக்கிய இராச்சியம் (UK), பெல்ஜியம், நோர்வேயிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை

எதிர்வரும் இரு வார காலப்பகுதியில் சுற்றுலாக்கள், யாத்திரைகள், பயணங்களில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு புத்தசாசன, கலாச்சார மற்றும் மத விவகார அமைச்சு பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பயணங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு, அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அத்தியாவசிய தேவையின்றி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறு, கட்டுப்பாட்டாளர் நாயகம் சரத் ரூபசிறி தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு மற்றும் வீசாக்களைப் பெறுவதற்காக தினமும் சுமார் 5,000 பேர் திணைக்களத்திற்கு வருகை தருவதாகவும், இந்நாட்களில் கொரோனா வைரஸ் பரவுவதால் அத்தியாவசியமாயின் மாத்திரம் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்திற்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், வெளிநாட்டிலிருந்து வருவோரை கட்டுப்படுத்தியுள்ளதோடு, அத்தியாவசிய தேவை தவிர வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனவும், அவர் கேட்டுக்கொண்டார்.

இன்று (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், நாளை (16) நள்ளிரவு முதல் எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி நள்ளிரவுடனான இரு வார காலத்திற்கு, ஐக்கிய இராச்சியம், பெல்ஜியம், நோர்வேயிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதாக, சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, நாளை (16) இரவு 11.59 மணி முதல் இத்தடையுத்தரவு அமுலில் இருக்கும் எனவும் அதற்கு பின்னர் குறித்த நாடுகளிலிருந்து எந்தவொரு விமானமும் நுழைய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இக்காலப்பகுதிக்கு முன்னர், குறித்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இரு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...