கொரோனா வைரஸ்; இத்தனை தீவிரமாக வீரியம் பெற்றது ஏன்?

கொரோனா என்பது தற்சமயம் உலகில் அதிகம் வருத்தத்துடனும் வலியுடனும் பயத்துடனும் உச்சரிக்கப்படும் ஒரு சொல்லாக விளங்குகின்றது. இதற்கு கோவிட்- -19 (civid --19) என உலக சுகாதார ஸ்தாபனம் பெயரும் இட்டுவிட்டது.  

‘Middle East respiratory Disease, Spanish flu’ என ஊர் பெயரிலோ, ‘Swine flu’ என விலங்கு பெயரிலோ, இனி இந்த வைரஸை அழைக்கக் கூடாது. ‘பழைய பெயர்கள் தேவையின்றி ஊரையும் விலங்கையும் பழித்து, தேவையற்ற சமூக விலக்கலை ஏற்படுத்துகின்றன. வைரஸுக்குக்கூட இன, மொழி, சாதிய அடையாளம் கூடாது என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்திருக்கிறது. இப்படியான அடையாளங்கள் தேவையற்ற பிரிவினையையும் விலக்கலையும் சமூகத்தில் உண்டாக்கிவிடும் என்பதே இதற்குப் பின்னுள்ள காரணமாகும்.  

கடந்த இரண்டு மாத காலமாக உலகம் மிரண்டு போய் நிற்கிறது. ‘இப்படியான சிக்கல்களை எதிர்காலத்தில் அடிக்கடி எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்கனவே எச்சரித்துக்கொண்டே வந்திருக்கிறது. ஏனெனில் உறக்க நிலையில் இருந்த பக்றீரியா, வைரஸ் பலவும் உசுப்பேறி உலாவரும் காலம் இது. உலகைச் சூடாக்குவதிலும், பனிமலைகளை உருக்கித் தள்ளியதிலும் இவ்வகை நுண்ணுயிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும் எனவும் உலக சுகாதார ஸ்தாபனமும் சுற்றுச்சூழல் அறிவியலாளர்களும் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர்.  

இவ்வாறான நிலையில் கொரோனா வைரஸினால் ஒட்டுமொத்த சீனாவும் முடங்கிப் போயுள்ளது. இந்த வேளையில், இந்திய மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தாமல் இருக்கவும் முடியாதுள்ளது. ஏனெனில் டெங்கு காயச்சலுக்கான தாக்கம் கடந்த ஆண்டை விடவும் இவ்வாண்டு வித்தியாசமாக இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு முன்னொரு போதும் இல்லாதபடி இக்காய்ச்சலுக்கு பின்னால் தீவிர மூட்டுவலியும் ஏற்படுகின்றன. இது நுண்ணுயிரியின் வீரியத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களின் விளைவு எனக் கருதப்படுகின்றன. அதனால் இவை உலக சுகாதார ஸ்தாபனத்தின் முன்னெச்சரிக்கையின் அடையாளங்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  

குறிப்பாக டெங்கு நோய் உடலில் பரவும் விதம், அதன் விளைவான அறிகுறிகள், மருந்து பொருட்களுக்குக் கட்டுப்படும் விதம் ஆகிய அம்சங்களில் 2018பருவத் தொற்றுக்கும் 2019பருவத் தொற்றுக்கும் இடையில் கணிசமான மாற்றங்கள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன.  

அதேநேரம், Multi drug resistant tuberculosis எனும் மருந்துகளுக்குக் கட்டுப்படாத காச நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. காச நோய்க்கான மருந்தை நேரடியாக நோயாளருக்கு வழங்கும் (DOTS) திட்டங்கள் அறிமுகமான பின்னரும், காச நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதாகத் தெரியவில்லை.  

மேலும் சாதாரண பூசணத் தொற்றுக்கு பாவிக்கும் எதிர் பூசண நுண்ணுயிரிகள் சமீபமாகப் பலனற்று போவதாக மூத்த மருத்துவர்கள் தெரிவிக்கத் தொடங்கியுள்ளனர். ஏனெனில் பழைய பூசணங்களில் ஏற்பட்டிருக்கும் புதிய வீரியமா? அல்லது அவை எல்லாம் பூசணம் 2.0என புதிய வடிவம் எடுத்துவிட்டனவா?’ என்ற கேள்விகளும் இந்திய மருத்துவ நிபுணர்கள் மத்தியில் ஏழுந்துள்ளன.  

முன்பு எளிதாகக் கையாளப்பட்ட சுவாசத்தொகுதி தொற்று, சிறுநீரக தொற்றுக்கான மருந்துப் பொருட்கள் இப்போது அவ்வளவு எளிதாக நோய் நிலையைக் கட்டுப்படுத்தக்கூடியதாக இல்லை.  

இதேவேளை, சாதாரண சிறுநீரக குழாய்கள் தொற்றாக வெளிப்படும் ‘ஈ - கோலை’ என்கிற நுண்ணுயிரி, இப்போது உயிர் அச்சுறுத்தல் விடுக்கும் குருதி சிறுதித்தட்டு நோயைக்கூட (T.T.P) ஆங்காங்கே தோற்றுவிக்கத் தொடங்கியுள்ளது. இவை மாத்திரமல்லாமல், நீரிழிவு நோய்க்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்திவரும் அதேநேரம், நுரையீரலில் ஏற்படும் காசமும் மூச்சுக்குழல் தொற்றும் அசாதாரண நிலையை அடைவது அதிகரித்துள்ளது.  

இந்நிலைகள் குறித்து மருத்துவ உலகம் மிகவும் கவனமாக அணுக வேண்டிய மிக முக்கியமான காலத்தில் உள்ளது. இந்நுண்ணுயிரிகளின் தாக்கம் நெருக்கடிகளை ஏற்படுத்தவும் அவை செயற்படாமல் போகும் நிலை உருவாவதற்கும் மருத்துவ உலகம் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை (அன்டிபயாட்டிக்) ஒழுங்குமுறையாக கையாளாததே பிரதான காரணம் என்கிறனர் மருத்துவ ஆய்வாளர்கள். அதாவது நுளம்பு ஒழிப்புக்கு ஏ.கே-47துப்பாக்கியை எடுத்துச் செல்லும் மனோபாவம் மருத்துவ உலகில் கடந்த 25ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கின்றது. மருந்து நிறுவனங்கள் புது புது வடிவில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை வருடாவருடம் சந்தைக்கு அறிமுகப்படுத்தின. இதன் விளைவாக எதற்கு இலேசான அடிப்படை மருந்துகள்? எடு அணுகுண்டை என்கிற மனோபாவத்தில் மருத்துவர்களும் மருத்துவ நிறுவனங்களும் செயல்பட்டனர்.  

இதனால் தொடக்க நிலை நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் தீவிர நுண்ணுயிர் கொல்லி மருந்துகளைப் பயன்படுத்தும் நிலை உருவானது. இதன் காரணத்தினால் தான் பல நுண்ணுயிரிகள் பலம் பெற்று மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகும் நிலை அதிகரித்திருக்கின்றது என்பதை மருத்துவ ஆய்வுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.  

இவை இவ்வாறிருக்க, உணவுப் பொருட்களுக்கு சேர்க்கப்படும் இரசாயனப் பொருட்கள் தொடக்கம் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பல விடயங்களும் இந்நுண்ணுயிர்கள் பலம் பெற பங்களிப்பு செய்து வந்துள்ளன. ஒவ்வொருவரது குடலிலும் கோடிக்கணக்கான பக்றீரியாக்கள், வைரஸ்கள் உள்ளன. அவை சமிபாட்டு பணிகளை மாத்திரம் மேற்கொள்வதாக மருத்துவ உலகம் நம்பி வந்தது. ஆனால் அவை சமிபாட்டுக்கான Probiotics மாத்திரமல்ல, நோயெதிப்பு சக்தி, புத்திசாலித்தனம் என்பன மேம்படவும் புற்றுநோய் போன்ற நோய்களைத் தடுக்கவும் எனப் பல பணிகளுக்கு மிக அவசியம் என்பது தொடர்பான புரிதல் தற்போது அதிகரித்து வருகிறது. Gut biome -Second genome என பெயரிடப்பட்டு நுட்பமாகப் பார்க்கத் தொடங்கிவிட்ட அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அந்த Gut biome கூட்டத்தை சிதைக்கும் வண்ணம் இரசாயனப் பொருட்களை அள்ளித்தெளித்த துரித உணவைச் சாப்பிடுவதும்கூட வைரஸ், பக்றீரியாவை தூண்டி விடலாம்.  

எனினும் மருத்துவ அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பலம் பொருந்திய சீனாவுக்கே இன்று கொரோனா பெரும் சவாலாக உள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் இவ்வைரஸ் தாக்கம் தீவிரமடைவதற்கு இங்குள்ள வெப்ப காலநிலை தடையாக உள்ளது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால் இது மருத்துவ அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத கருத்து என இலங்கை சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியக மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டியள்ளார்.  

ஆகவே கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருவதற்கு மருந்துப் பொருட்களின் தவறானதும் பிழையானதும் பயன்பாடா காரணம் என்ற அச்சமும் மருத்துவ நிபுணர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது. அதனால் கொரோனா வைரஸ் உலகில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கும் இன்றைய சூழலில் நோய்கள் தொடர்பில் கவனயீமாக நடந்து கொள்ளவும் கூடாது. நோய்த்தொற்றுக்களைத் தவிர்த்துக் கொள்வதிலும் விரைவாகக் குணப்படுத்திக் கொள்வதிலும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இவற்றின் நிமித்தம் மருத்துவர்களின் ஆலோசனை, வழிகாட்டல்கள் படி செயற்பட வேண்டியது இன்றியமையாததாகும்.

 


Add new comment

Or log in with...