தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் விநியோகிக்க ஆணைக்குழு

தொலைக்காட்சி, வானொலி அனுமதிப்பத்திரம் விநியோகிக்க ஆணைக்குழு-Radio-TV-Regulatory Commission-Committee Appointed by Cabinet

- ஆராய அமைச்சரவையினால் குழு நியமனம்
- 27 வானொலி, 54 தொலைக்காட்சி அனுமதிப்பத்திரம் விநியோகம்
- 18 வானொலி, 28 தொலைக்காட்சிகளே நடைமுறையில்

வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் பணியை, ஒளிபரப்பு சேவைகள் ஆணைக்குழு மூலம் மேற்கொள்வது தொடர்பில் ஆராய குழுவொன்று நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று (04) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தகவல் தொடர்பாடல் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகிய இரு ஒலி, ஒளிபரப்பு சேவைகள் தொடர்பிலான விடயங்களை ஒழுங்குபடுத்த, 'ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு' எனும் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளை முன்னெடுப்பதற்காக 1966ஆம் ஆண்டு இல 37 இன் கீழான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சட்டம் மற்றும் 1982ஆம் ஆண்டு இல 06 இன் கீழான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன சட்டத்திற்கு அமைவாக, தற்பொழுது தனியார் வானொலி ஒலிபரப்பிற்கான அனுமதிப் பத்திரம் வழங்கப்படுகின்றது.

இதற்கமைவாக இதுவரையில் 27 தனியார் வானொலி ஒலிபரப்பு அனுமதிப்பத்திரம், மற்றும் 54 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள்; வழங்கப்பட்டுள்ளன.

ஆயினும் 18 வானொலி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் 28 தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதி பத்திரங்கள் மாத்திரம் தற்பொழுது நடைமுறையில் இருந்து வருகின்றன.

இவ்வனுமதி பத்திரங்களை வழங்குதல் நடைமுறை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவினால், வானொலி மற்றும் தொலைக்காட்சி என்ற ஊடகங்களில் இரண்டு வகைகளும் தொடர்பில் செயற்படுகின்ற தனியான மற்றுமொரு நிறுவனமொன்று இருப்பதன் தேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்காக 'ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு' எனும் பெயரில் திருத்தச் சட்டமூலமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்டமூலத்தை தொடர்ந்தும் மதிப்பீடு செய்து பரந்துரைகளை சமர்ப்பிப்பதற்காகவும், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு அனுமதிப்பத்திரத்தை விநியோகிக்கும் பணியை, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (TRC) சட்டத்தின் ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம், மேற்படி ஆணைக்குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள முடியுமா என்பது தொடர்பில் கண்டறிவதற்காகவும், இத்துறையில் அனுபவமிக்க புத்திஜீவிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க இதன்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...