இதயத்தைப் பாதுகாத்து கொள்ள... | தினகரன்

இதயத்தைப் பாதுகாத்து கொள்ள...

மனிதனின் உயிரைப் பறிக்கும் நோய்களுள் முக்கியமானது இதய செயலிழப்பாகும். அதிலும், நீரிழிவு நோய்க்கு உள்ளாகியுள்ளவர்களின் இதயமானது சாதாரணமானவர்களின் இதயத்தைவிடவும் மும்மடங்கு பலவீனமானதாகக் காணப்படும். அதன் காரணத்தினால் இதயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவது மிகவும் அவசியம்.  

அதேநேரம், இதயப் பாதிப்புகளானது வயதானவர்களுக்கு மாத்திரமல்லாமல் பிறந்துள்ளவர்களுக்கும் வரலாம். சிறுவயதிலும் வரலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம். இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் ஏற்படும் இதய நோய்கள் குறித்து தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  

இவ்வாறு இதயப் பாதிப்புக்கள் ஏற்பட உடல்பருமன், உடல் உழைப்பின்மை, நீரிழிவு நோய் கட்டுப்பாடின்மை, தொடர் மனச்சிதைவு நோய், தொடர் மருத்துவப் புறக்கணிப்பு என்பன காரணங்களாக அமையலாம். இந்த இதயப் பாதிப்புகளானது ஐம்பது வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படக்கூடியதாக இருந்து வந்த போதிலும் கடந்த சில வருடங்களாக இருபது வயதினரைக்கூட அதிகம் தாக்கக்கூடியதாக விளங்குகின்றது.  

குறிப்பாக, இதயத் தமனி நோய்கள் நீரிழிவு நோயாளர்களை அதிகமாகத் தாக்கக்கூடியனவாக உள்ளன. அதனால் உயரத்துக்கு ஏற்பட உடல் எடையையும், குருதியில் குளுக்கோஸின் அளவையும், இதய குருதி நாளங்களில் கல்சியம் படிவதையும் குறைத்து உரிய அளவில் பேணிக் கொள்ள வேண்டும். அத்தோடு உடலில் கெட்ட கொழுப்பு (LDL) அதிகரித்து விடாமலும் உடலில் உற்பத்தியாகும் நல்ல கொழுப்பு (HDL) உரிய மட்டத்தில் பேணிக்கொள்வதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.  

அத்தோடு உணவு, உள்ளுணர்வு மற்றும் உடல் உழைப்பு என்பவற்றை உரிய முறையில் பேணிக் கொள்ள வேண்டும். குறிப்பாக உடலில் குளுக்கோஸ் மட்டத்தை உயர்த்திடும் மா சத்து உணவு வகைகளை நாளொன்றுக்கு 100கிராமுக்கு மேற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்போது உணவு முறையால், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவடைந்துவிடும். உடல் பருமனும் கட்டுப்படுத்தப்பட்டு விடும். அவற்றின் ஊடாக இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படாமலும் தடுக்கப்பட்டுவிடும்.  

மேலும் தொடர் மன உளைச்சல், மன இறுக்கம், மனச்சிதைவு போன்றவற்றுக்கு முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் இதயப் பாதிப்புக்கான வாய்ப்புக்கள் அதிகரிக்க முடியும். ஹோர்மோன் வித்தியாசங்களால் ஏற்படும் இதயப் பாதுகாப்பும் குறைவடையும். அத்தோடு உடல் உழைப்பு குறைந்தால், உடலின் அனைத்து தசைகளும் பலவீனமடையும். இதய தசைகளுக்கும் அதன் தமனிகளுக்கும் தேவைப்படும் ஆரோக்கிய சூழல் குறைவடையும். இவற்றின் விளைவாக இதய நோய்கள் ஏற்படும் அச்சுறுத்தல் அதிகரிக்கும்.  

ஆகவே முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு, இதயம் தொடர்பான பெரும்பாலான நோய்களுக்கு பெரிதும் பங்களிக்கும் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது நல்லது. அதன் மூலம் இதய நோய்கள் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ள முடிவதோடு அடுத்த தலைமுறையினரையும் பாதுகாத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும். 


Add new comment

Or log in with...