ரூபா 70 கோடி நஷ்டம்! | தினகரன்

ரூபா 70 கோடி நஷ்டம்!

சம்பளத்தை அரைவாசியாக குறைத்துக் கொண்ட ரஜினி

வீழ்ச்சி ஆரம்பம்

தமிழ் திரைப்பட உலகில் ரஜினியின் சரிவு ஆரம்பமாகி விட்டதென்றுதான் சினிமாத் துறை நிபுணர்கள் பேசிக் கொள்கிறார்கள். 'தர்பார்' படத்தின் தோல்வி இதனைப் புலப்படுத்துவதாக சினிமா வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இத்தனை காலமும் 'சூப்பர் ஸ்டார்' என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த நடிகர் ரஜினி இனிமேல் வீழ்ச்சியை நோக்கி பயணம் செய்யத் தயாராக வேண்டியதுதான் என்கிறார்கள் சினிமா பிரபலங்கள்.

'தர்பார்' படம் எதிர்பார்த்தபடி ஓடாததால் ரஜினியின் அடுத்த படமான 'தலைவர் 168' படத்திற்கு ரஜினியின் சம்பளத்தை பாதியாகக் குறைத்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

ரஜினிகாந்த் 25 ஆண்டுகள் கழித்து பொலிஸ் அதிகாரியாக நடித்த 'தர்பார்' படம் கடந்த மாதம் 9ம் திகதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. ஆனால் 'தர்பார்' படத்தால் விநியோகஸ்தர்கள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர். இதையடுத்து நஷ்டஈடு கேட்டு அவர்கள் ரஜினியின் வீடு மற்றும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் அலுவலகத்திற்குச் சென்றனர். 'தர்பார்' படத்தால் ரூ. 70 கோடி ரூபா அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 'தர்பார்' படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தை சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸின் கலாநிதி மாறன் கடந்த வாரம் 'தலைவர் 168' செட்டில் வைத்து ரஜினியை சந்தித்து பேசியுள்ளார்.

"தர்பார்நஷ்டமானதால் இந்தப் படத்திற்கு உங்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்" என்று கலாநிதி மாறன் கூறியதைக் கேட்டு ரஜினி அதிர்ச்சி அடைந்தாராம். சம்பளத்தைக் குறைக்காவிட்டால் படத்தை கைவிடவும் கலாநிதி மாறன் தயாராக இருந்தாராம்.

அதன் பிறகு ரஜினி தனது சம்பளத்தை பாதியாகக் குறைக்க ஒப்புக் கொண்டார் என்று தெரிவிக்கப்படுகிறது. தர்பார் படத்திற்காக ரஜினிக்கு ரூபா 118 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 'தலைவர் 168' படத்திற்கு அவருக்கு ரூபா 58 கோடி தான் சம்பளம் கொடுக்கப்படவுள்ளது.

ரஜினியின் படத்தை நம்பி வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் தயாராக இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. 'தலைவர் 168' படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆனாலும் ரஜினியின் அடுத்த படம் வெற்றி பெறுமென்பது சந்தேகமாகவே உள்ளது. ரஜினியின் இடத்தை விஜய் கைப்பற்றி விட்டதாகவே சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

'பிகில்' படத்தின் வெற்றி இதனைப் புலப்படுத்துவதாக சினிமா முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். தர்பார் படத்தை பிகில் படம் வீழ்த்தியிருப்பது ரஜினியின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்கின்றனர் அவர்கள்.


Add new comment

Or log in with...