சிவராத்திரி தோன்றிய வரலாறு

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து பரமனான ஈசனை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடற்புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கயிலாய மலையில் வீற்றிருக்கும் அன்னையான பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் இரண்டு கண்களையும் தன் கைகளால் மூடினாள். உலகுக்கு ஒளி வழங்கும் சூரிய சந்திரர்களான அவருடைய கண்கள் மூடப்பட்டு எங்கும் காரிருள் சூழ்ந்தது. உலகம் முழுவதும் அந்தகாரம் சூழ்ந்து அச்சமூட்டியது. அப்போது தனது நெற்றிக்கண்ணான மூன்றாம் கண்ணைத் திறந்தார் ருத்ரன்.

அதன் வெம்மையினால் இந்த உலகம் ஸ்தம்பித்துப்போனது. இதுவே பிரளயகாலம் என்றும் அழைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள்.

பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை,தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே – அதாவது `சிவராத்திரி‘என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் – மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.

சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது.

பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.


Add new comment

Or log in with...