இறைவழிபாட்டில் வெளிவேஷங்கள் தேவை இல்லை; இயல்பான வழிபாடே போதுமானது

(கடந்த வாரத் தொடர்)

இந்து சமயத்தின் முக்கிய அம்சமே, அது வேதங்கள் உபநிஷத்துக்ள், தத்துவங்கள், ஆகமங்கள், புராணங்கள், தர்மங்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்ட ஆன்மிக அடிப்படையில் தங்கி இருப்பதுதான். அது மட்டுமின்றி எந்த நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்வது இந்து சமயத்தின் தனித்துவமான சிறப்பாகும்.  

இந்து சமயம் மனிதனுக்கும் அவனது கொள்கை, வாழ்க்கை முறை, வழிபாட்டு முறைகளுக்கு முழுமையான சுதந்திரத்தை கொடுத்துள்ளது. அதனால் தான் எத்தனையோ சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள் இருந்தாலும் இந்துக்கள் தம் இறைவழிபாட்டை வாழ்வியலோடு, ஒருங்கிணைந்த ஒன்றாக, எளிமையானதாக வைத்துள்ளனர்.  

சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் மக்களின் வாழ்க்கை நடைமுறைகள் ஒவ்வொன்றும் இந்து சமய இறைவழி பாட்டில் எதிரொலித்தப்படி உள்ளது. அதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.  

ஆதி காலத்தில் காதல் புனிதமாக கருதப்பட்டது. அந்த புனிதம் தெய்வங்களின் லீலைகள் மூலம் உணர்த்தப்பட்டது.  

கிருஷ்ண பரமாத்மா சத்தியபாமாவை காதலித்து கரம்பிடித்தார். முருகப்பெருமான் தினைப்புனத்தில் காவல் இருந்த வள்ளியை காதலித்து திருமணம் செய்தார். அது போல கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஊடல் ஏற்படுவதையும் இறைவழிபாட்டில் காணலாம். சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் சிவம் பெரிதா, சக்தி பெரிதா என்ற ஊடல் ஏற்படுகிறது. இறுதியில் சக்தி இல்லாமல் சிவன் இல்லை. சிவன் இல்லாமல் சக்தி இல்லை என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.    ஆண், பெண் இருவரில் யார் உயர்வு, யார் தாழ்வு என்ற பேச்சுக்கே இடமில்லை. இருவரும் சமம் என்பது ஆலய வழிபாட்டில் பல்வேறு வகைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆணும், பெண்ணும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. இந்து மத தெய்வக் கோட்பாட்டில் சிவலிங்கத்தின் தத்துவமே இதுதான்.  

அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தத்துவமும் இதனை உள்ளடக்கியதுதான். எந்த நிலையிலும் ஆண் - பெண் சரிநிகர் சமம் என்பதை இந்து மதம் காலம், காலமாக உணர்த்தியபடி உள்ளது. இந்த அடிப்படையில் தான் இந்து ஆலயங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் மையங்களாக உருவாக்கப்பட்டன.  

ஆலயங்களில் நடத்தப்படும் திருவிழாக்கள் அனைத்தும் நமது சமுதாயத்தை ஒருங்கிணைப்பதற்காக நம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டவையாகும். தேர் திருவிழா நடக்கும் போது தேரை ஏழை - பணக்காரர், தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி என்ற பாகுபாடு இல்லாமல் எல்லாரும் வடம் பிடித்து இழுப்பார்கள்.    ‘இறைவன் முன்பு நாம் அனைவரும் சமம்’ என்ற மிகப்பெரிய வாழ்வியல் நெறி அங்கு உணர்த்தப்படுகிறது. மேலும் வாழ்வில் எவ்வளவு துன்பம், துயரம், பிரச்சினைகள் வந்தாலும் அத்தனையையும் அடிபணிய வைப்பது ஆலய வழிபாடுதான்.  

(தொடரும்)


Add new comment

Or log in with...