இரக்க மனப்பான்மையும் மரியாதைப் பண்பும் | தினகரன்


இரக்க மனப்பான்மையும் மரியாதைப் பண்பும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சிறியோருக்கு இரக்கம் காட்டப்படாதவரும், பெரியோரின் மதிப்பை உணராதவரும் எம்மைச் சார்ந்தவரல்ல.

(ஆதாரம் : அபூதாவூத், திர்மிதி).

இந்த ஹதீஸ் தாரமி, முஸ்னத், அஹமத் போன்ற கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

சமூக வாழ்வு வளமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் அமைவதற்கு மனிதனை மதித்தல் அடித்தளமாக அமைகிறது. இஸ்லாம் மனிதனை மதிக்குமாறு கட்டளை இட்டதுடன் அதற்கான வழிகாட்டல்களையும் முன்வைக்கிறது. மனிதன் மண்ணால் படைக்கப்பட்டு இறைவனின் ரூஹ் ஊதப்பட்டிருப்பதே அவன் மதிக்கப்படுதவற்கு பிரதான காரணமாகும். இந்த அடிப்படைத் தத்துவப் பின்னணியில் நாம் இந்த ஹதீஸை விளக்குவோம்.

சிறார்கள் நாளைய தலைவர்கள். இன்றே அவர்களை நல்ல முறையில் வளர்த்துப் பரிபாலித்திட வேண்டிய கடப்பாடு மூத்தவர்களைக் சார்ந்துள்ளது.

தனது ரூஹ் ஊதப்பட்ட மானிட வர்க்கதின் மீது அளவற்ற அருளையும், நிகரற்ற அன்பையும் பொழிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். அவனுக்கு எதிராக மனிதன் செயலாற்றும் போது கூட அவனது அன்பு அவனது கோபத்தை விஞ்சி நிற்கிறது. இந்தப் பிரபஞ்சம் அன்பினால் நிர்வகிக்கப்படுகிறது. அப்படியென்றால் இறைவனின் ரூஹ் ஊதப்பட்ட சிறார்களுடன் மூத்தவர்கள் அன்பைப் பரிமாறுவது கட்டாயக் கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் பிள்ளை வளர்ப்பின் போது அன்பை அடிப்படையாகக் கொண்ட பயிற்றுவிப்பு முறை அவசியம் என்பதை உணர்த்துகிறார்கள். கடும்போக்கு, வன்மை, சட்டம், பலாத்காரம், பலவந்தம், சாட்டை, துப்பாக்கி போன்றவை சாதிக்க முடியாதவற்றை அன்பு, இரக்கம், பாசம், நேசம், மென்மை போன்ற பண்புகள் சாதித்து விடுகின்றன.

எனவே தான், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நிச்சயமாக அல்லாஹ் மென்மையானவன். அவன் மென்மையை விரும்புகிறான். கடும் போக்கு – அதைத் தவிர்த்து உள்ள பண்புகளினால் உருவாக்கத்தை நல்விளைவுகளை மென்மை என்ற பண்பு மூலம் அல்லாஹ் தோற்றுவித்து விடுகிறான்                              (முஸ்லிம்)

பொதுவாக மூத்தோர், சிறார்கள் விடயத்தில் கடும்போக்கைப் பிரயோகிக்கின்றனர். ஒரு பொலிஸ்காரனைப் போல அவர்களுடன் நடந்து கொள்கின்றனர். பெற்றோர் தங்கள் குடும்ப வாழ்வில் சந்திக்கின்ற எரிகின்ற பிரச்சினைகள், உளைச்சல்கள் முதலியவற்றின் அடியாக உருவாகின்ற எரிச்சல்கள், எதிர்ப்புணர்வுகள், கோபம், வெறுப்புணர்வுகளை சிறார்களின் முன் கொட்டுகின்றனர். கண்டிப்பும், தண்டிப்பும் பிள்ளை வளர்ப்பில் பரவி வியாபித்துக் காணப்படுகின்றன. இதனடியாக சிறார்கள் உளரீதியாகப் பாதிப்படைந்து சிந்தனா ரீதியாகவும், ஒழுக்க ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் நலிவடைந்து விடுகின்றனர். சமூகத்தில் நற்பிரஜையாக வாழ்வதற்குப் பகரமாக சிறார்கள் வன்முறையாளர்களாக வாழத்தலைப்படுகின்றனர்.

பெற்றோரின் கண்டிப்பும், தண்டிப்பும் அன்பின் அடியாக உருவானது என்று ஒரு பிள்ளை உளத்திருப்தியடைகின்ற அளவு ஏலவே பெற்றோர் மற்றும் மூத்தவர்கள், சிறார்களுடன் அன்பு பாராட்டி அவர்களது உள்ளத்தை சம்பாதித்திருக்க வேண்டும். இத்தகைய விழுமியத்தை அண்ணலாரின் நடைமுறை வாழ்வில் நாம் அவதானிக்க முடிகிறது.

அனஸ் (ரலி) அவர்கள்

அறிவிக்கின்றார்கள் :

மதீனாவிலுள்ள சிறுமி ஒருத்தி அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொண்டு அவள் விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்வாள்.

(புகாரி)

அனஸ் (ரலி) அவர்கள் சிறார்களைக் கடந்து செல்லும் போது அவர்களுக்கு ஸலாம் சொல்லி விட்டு, நபி (ஸல்) அவர்கள், அவர்களுடன் (சிறார்களுடன்) இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று கூறுவார்கள்                 (புகாரி, முஸ்லிம்)

அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் ஒரு ரஸுல், மதீனாவின் ஆட்சித் தலைவர். சிறார்களுக்கு இரக்கம் காட்டி, கூடிப்பழக அவர்களுக்கு நேரம் இருக்கிறது. எமது அவசரமான உலகில் சிறார்களுக்கு இரக்கம் காட்டி, கூடி விளையாடி அவர்களது ஆதங்கங்களை உள்வாங்கிக் கொள்ள மூத்தவர்கள் நேரம், இடம் கொடுக்காமல் இருப்பது ஆச்சரியமே!

சிறுவர்களுக்கு இரக்கம் காட்டப்படுவது போல் பெரியோர் மதிக்கப்படல் வேண்டும். பெற்றார் மற்றும் மூத்தோர் வயோதிபர், ஆலிம்கள், ஸாலிஹீன்கள் உள்ளிட்ட அனைவரும் மதிக்கப்படல் வேண்டும். இவர்கள் மதிக்கப்படாமைக்கு இவர்கள் அந்தஸ்துகள் பிறரால் உணரப்படாமை பிரதான காரணமாகும்.

எனவே தான் ஹதீஸின் மூலத்தில் எவர் உணரவில்லையோ என்ற பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. பெரியோரின் கண்ணியத்தை உணராதவர், அறியாதவர் அவர்களை எவ்வாறு கண்ணியப்படுத்துவார்? எனவே தான் இஸ்லாம் அறிவு, தெளிவு, ஆகியவற்றின் அடியாக கடமைகளை விதிக்கிறது. அறிவும், தெளிவும், உணர்வும் இல்லாதவரிடத்தில் கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் பண்பை எதிர்பார்க்க முடியுமா?

அல்குர்ஆன் ஏகத்துவக் கொள்கைக்கு அடுத்தபடியாக பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறு வலியுறுத்துகிறது. மனிதனது உலகப் பிரவேசத்துக்கு முழு முதற் காரணமாக அல்லாஹ் இருக்கின்றான். அடுத்ததாக பெற்றோர்கள் இருக்கின்றனர்.

மனிதர்களில் நான் நல்லுறவைப் பேணுவதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர் யார்? என ஒரு நபித்தோழர் கேட்க, மூன்று முறையும் உனது தாய் என பதிலளித்த அண்ணலார், நான்காவதாக அவர் வினவிய போது, உனது தந்தை என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தந்தை சுவனத்தில் நடுவாயில், நீ விரும்பினால் அதைப் பாதுகாத்துக் கொள்! நீ விரும்பினால் உடைத்து விடு.

(திர்மிதி)

சுவனப் பிரவேசத்துக்கு தாயும், தந்தையும் காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர் என்பதை மேற்படி ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

அவ்வாறே மதிக்கப்பட வேண்டியவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இனங்காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒரு சமூகத்துக்கு அல்குர்ஆனைக் கற்றுத் தேர்ந்தவர் தொழுகை நடாத்தட்டும். குர்ஆனைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஸுன்னாவைக் கற்றுத் தேர்ந்தவர் தொழுகை நடத்தட்டும். சுன்னாவைக் கற்றதில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்தவர் தொழுகை நடத்தட்டும். ஆரம்பத்திலேயே ஹிஜ்ரத் செய்ததில் அனைவரும் சமதரத்தில் இருந்தால் அவர்களில் வயதால் மூத்தவர் அவர்களுக்கு தொழுகை நடத்தட்டும்.(முஸ்லிம்)

அஷ்ஷெய்க்
மின்ஹாஜ்
இஸ்லாஹி


Add new comment

Or log in with...