மாங்குளம் வைத்தியசாலை காணியில் மனித எச்சங்கள்

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு தரவுகளை சேகரிக்குமாறும் இன்றைய தினம் இப் பகுதியை முழுமையாக அகழ்ந்து மேலும் மனித எச்சங்கள் உள்ளனவா என்பதை ஆராயுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் எஸ்.லெனிகுமார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மாங்குளம் வைத்தியசாலை வளாகத்தில் புதிதாக புனர்வாழ்வு வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியான கட்டட வேலைகளுக்காக காணி துப்புரவு பணிகள் இடம்பெற்றுவந்தன.

எனினும் அங்கு கண்ணிவெடிகள் இருப்பதாக தெரிவித்து மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களினால் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுவந்த நிலையில் குறித்த காணியின் ஒரு பகுதியில் மனித எச்சங்கள் காணப்பட்டதை அவதானித்த பணியாளர்கள்  மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

இது தொடர்பாக மாங்குளம் பொலிஸார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்பித்தனர். இதனையடுத்து நேற்று மாவட்ட நீதிபதி எஸ் லெனின்குமார் சம்பவ இடத்துக்கு சென்று மனித எச்சங்களை பார்வையிட்டதுடன் விசாரணைகளை மேற்கொண்டார்.

மேலும் இவ் விடத்தின் ஆரம்பகால வரலாறு தொடர்பாகவும் இந்த விடயம் தொடர்பான வரலாறுகளை ஆராயுமாறும் பொலிஸாருக்கு நீதவான் கட்டளையிட்டதுடன் இப் பகுதியை இன்றைய தினம் மேலும் அகழ்வு செய்யுமாறும் அறிவுறுத்தினார்.

குறித்த இடத்தில் மண்டையோடுகள், எலும்பு எச்சங்கள் மற்றும் சீருடைகளின் பாகங்கள் சிலவும் காணப்பட்டன. இவை 2009க்கு முற்பட்ட காலப்பகுதியை சார்ந்ததாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதேவேளை இது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை இது தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய பொலிஸாரால் தடைவிதிக்கப்பட்டிருந்தது.

எனினும் இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் நீதவானின் கவனத்துக்கு கொண்டு சென்றதையடுத்து நீதவான் உத்தரவுக்கமைய பத்துநிமிடங்களின் பின்னர் அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தகது.

மாங்குளம் குறூப் நிருபர்

 

Add new comment

Or log in with...