முதுபெரும் எழுத்தாளர் மல்லிகை சி.குமார் காலமானார்

மலையக இலக்கியத்துறைக்கு பாட்டாளி வர்க்க உருவம் கொடுத்த மலையக மூத்த முற்போக்கு எழுத்தாளர் மல்லிகை சி.குமார் நேற்று தனது 76ஆவது வயதில் காலமானார்.

200ற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கும் சி.குமார் இலங்கையில் சிறுகதைத்துறையில் சாதனை படைத்தவராக விளங்குகின்றார். தனது கல்வியை சாதாரண தரத்தில் முடித்து கொண்டு  மிருக வைத்தியதுறையில் ஈடுபாடுகாட்டிய அவர் மலையகத் தோட்டப்புறங்களில் கால்நடை வளர்ப்புக்கு ஊக்கமூட்டும் வகையில் அரும்பணியாற்றியிருக்கிறார்.

கால்நடை வளர்ப்பு தொடர்பான கட்டுரைகள் ஏராளம் எழுதி குவித்துள்ள இவர் சிறந்த ஓவியராகவும், கவிஞராகவும் திகழ்ந்தார். சி.குமாரின் கவிதைகள் பாடப்புத் தகங்களில் கூட வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலஞ்சென்ற சரோஜாவின் கணவரான இவருக்கு ஊடகவியளாலரான சுகுனா என்ற மகளும் மாறன் என்ற மகனும் இருக்கின்றனர்.

ஆறுமாத காலமாக சுகயீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இவர் காலமானார்.

தலவாக்கலை பெரிய மல்லிகை பூந்தோட்ட இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் அவரது பூதவுடல் நாளை வியாழக்கிழமை 11 மணியளவில் தலவாக்கலை பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை இவரது மறைவினால் ஈழத்து தமிழ் இலக்கிய உலகம் பெரும் கவலைகொண்டுள்ளது. சிகுமாரின் பல சிறுகதைகள் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...