அமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்

அமெரிக்காவின் GSP வரிச் சலுகை ஏப்ரல் 22 முதல் அமுல்-USA GSP Tax From Apr 22

இலங்கையின் ஏற்றுமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவினால் வழங்கப்படுகின்ற ஜி.எஸ்.பி வரிச் சலுகை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுத்தீன்  தெரிவித்தார். 

இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு ஜீ.எஸ்.பி வரி சலுகையை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரையில் நீடிக்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த மார்ச் 23 இல் கையொப்பமிட்டிருந்தார்.

அதன்படி இந்த வரிச் சலுகை இம்மாதம் 22 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் முன்னுரிமைப்படுத்தலுக்கான பொதுமைப்படுத்தப்பட்ட திட்டம் (ஜி.எஸ்.பி) 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம்திகதியுடன் காலாவதியாகிய நிலையில் அதன் மீள் அங்கீகாரத்தை அமெரிக்க காங்கிரஸ் வழங்கவில்லை. 

இதன் விளைவாக ஜி.எஸ்.பி கடந்த 2017 ஆம் ஆண்டுடன் காலாவதியாகியதால், இலங்கை மற்றும் ஜி.எஸ்.பி சலுகை பெறும் நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் எற்றுமதிகளுக்கு ஜனவரி 01, 2018 முதல் அமுலுக்கு வரும் வகையில் முன்னுரிமையற்ற வரிகள் விதிக்கப்பட்டது. 

எவ்வாறாயினும் மீண்டும் அந்த வரிச் சலுகையை வழங்குவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 


Add new comment

Or log in with...