அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு கைச்சாத்து | தினகரன்


அமெரிக்கா–சீனா இடையிலான வர்த்தக உடன்பாடு கைச்சாத்து

சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பூசலை தணிக்கும் வகையில் இரு நாடுகளும் வர்த்தக உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன.

இதன்மூலம் உலக வர்த்தகத்தில் நிலவும் நெருக்கடி ஓரளவு மட்டுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வொஷிங்டன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமெரிக்க மற்றும் சீன உயர்மட்ட பிரதிநிதிகள் முன்னிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லீயு ஹீ ஆகிய இருவரும் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த வர்த்தக உடன்பாடு, அமெரிக்கப் பொருளாதாரத்தை உருமாற்றும் என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறினார்.

“இருநாடுகளும் சேர்ந்து கடந்த காலத்தில் செய்த தவறுகளை சரியாக்குகிறோம். மேலும் எதிர்காலத்திற்கான பொருளாதாரத்திற்கான பாதுகாப்பை இது வழங்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தால் உலக அமைதி மேம்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“தங்களின் நாட்டின் நிலைக்கு பொருந்தக் கூடிய ஒரு அரசியல் அமைப்பையும், பொருளாதார வளர்ச்சி மாதிரியையும் சீனா உருவாக்கியுள்ளது.

அதற்காக சீனா மற்றும் அமெரிக்கா ஒன்றாக பணியாற்ற முடியாது என்று அர்த்தமில்லை” என சீனாவின் துணை பிரதமர் லீயு ஹீ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிலிருந்து இருநூறு பில்லியனுக்கும் அதிகமான இறக்குமதி செய்யவும், மதிநுட்பச் சொத்து தொடர்பான விதிகளை வலுப்படுத்தவும் சீனா உறுதியளித்துள்ளது.

பதிலுக்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரியைப் பாதியாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு பில்லியன் டொலர் மதிப்பில் விதிக்கப்படும் வரி தொடர்ந்து நடப்பிலிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்த வர்த்தகக் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன.

கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி வரிகளை விதித்து பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டன.

இதன் விளைவாக பொருட்களின் மீது 450 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான இறக்குமதி வரி விதிக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த பிரச்சினையால், இருநாடுகளுக்குமான வர்த்தக நடவடிக்கையில் பாதிப்பு ஏற்பட்டதுடன், உலக பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது. முதலீட்டாளர்களிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.

சீனா நெறிமுறையற்ற வர்த்தக முறைகளை கடைப்பிடிப்பதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது. உள்ளுர் வர்த்தகங்களுக்கு மானியங்கள் வழங்குவது மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் செயல்படுவதை கடினமாக்குவது போன்ற நடவடிக்கையில் சீனா ஈடுபடுவதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியிருந்தது.


Add new comment

Or log in with...