பாடசாலைகள் கிரிக்கெட்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றி | தினகரன்


பாடசாலைகள் கிரிக்கெட்: யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இன்னிங்ஸ் வெற்றி

19 வயதுக்குட்பட்ட டிவிஷன் – III பாடசாலைகள் இடையில் இடம்பெறும் இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் போட்டியொன்றில், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி அக்குறணை அஸ்ஹர் கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.

அக்குறணை அஸ்ஹர் கல்லூரி அணியின் சொந்த மைதானத்தில் கடந்த 13ம்திககி தொடங்கிய இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அஸ்ஹர் கல்லூரி அணி விருந்தினர்களாக வந்த யாழ். மத்திய கல்லூரியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது.

இதன்படி முதலில் துடுப்பாடிய யாழ். மத்திய கல்லூரி அணிக்காக நிதுஷன் சதம் பெற்றார். இது தவிர இயலரசன், கவிதரசன் மற்றும் வியாஸ்காந்த் ஆகியோர் அரைச்சதம் பெற்றனர்.

இந்த வீரர்களது துடுப்பாட்ட உதவியோடு யாழ். மத்திய கல்லூரி அணியானது 64.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 398 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது தமது துடுப்பாட்டத்தை இடை நிறுத்திக் கொண்டது.

யாழ். அணியின் துடுப்பாட்டம் சார்பில் சதம் பெற்ற நிதுஷன் 138 ஓட்டங்கள் குவிக்க, இயலரசன் 75 ஓட்டங்கள் பெற்றிருந்தார். அதேநேரம், கவிதர்சன் 56 ஓட்டங்களையும், வியாஸ்காந்த் 53 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்து களத்தில் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

அஸ்ஹர் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் அம்மார் 3 விக்கெட்டுக்களையும், இரு கைளாலும் பந்துவீசக்கூடிய ஹாமிட் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 37 ஓட்டங்களைப் பெற்று தமது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது.

அஸ்ஹர் கல்லூரியினை தனது வேகப் பந்துவீச்சு மூலம் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சகலதுறை வீரர் இயலரசன் 6 விக்கெட்டுக்களை கைப்பற்ற, விதுஷன் மற்றும் நியூட்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் விதுஷன் எந்தவித ஓட்டங்களையும் விட்டுக் கொடுக்காமலே இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்பதனால், 361 ஓட்டங்கள் பின்தங்கியவாறு பலோவ் ஓன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அஸ்ஹர் கல்லூரி அணி இம்முறையும் துடுப்பாட்ட அனர்த்தம் ஒன்றினை வெளிப்படுத்தி 53 ஓட்டங்களை மாத்திரமே பெற்றதோடு போட்டியிலும் இன்னிங்ஸ் மற்றும் 308 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

அக்குறணை அஸ்ஹர் கல்லூரி அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டிய இயலரசன் 6 விக்கெட்டுக்களைச் சுருட்டி போட்டியில் மொத்தமாக 12 விக்கெட்டுக்களைச் சாய்த்திருந்தார்.

போட்டியின் முதல் இன்னிங்ஸில் யாழ். மத்திய கல்லூரிக்காக சதம் பெற்ற நிதுஷன் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டு 2 விக்கெட்டுக்களைப் கைப்பற்றி தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்திருந்தார்.


Add new comment

Or log in with...