சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரர்களுக்கான விருதுகள், அணிகள் அறிவிப்பு

ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட் சபையால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய கடந்த 2019ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் சபையின் விருதுகள் மற்றும் அணிகள் (புதன்கிழமை) அறிவிக்கப்பட்டன.

சர்வதேச கிரிக்கெட் சபையின் சிறந்த வீரருக்கான விருதை, இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸ் வென்றார்.

இதன்படி, ஆண்டின் சிறந்த வீரருக்கான ‘சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ்’ விருதை பென் ஸ்டோக்ஸ், தட்டிச் சென்றார்.

ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பெட் கம்மின்ஸ், தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெட் கம்மின்ஸ் கடந்த சீசனில் 23 இன்னிங்ஸில் 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த ஒருநாள் வீரராக இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ரோஹித் சர்மா, கடந்த சீசனில் 28 ஒருநாள் போட்டிகளில் 1,490 ஓட்டங்களை பெற்றார். அத்தோடு, நடைபெற்று முடிந்த உலகக்கிண்ண தொடரில் 5 சதங்கள் அடங்களாக மொத்தமாக கடந்த சீசனில் 7 சதங்கள் அடித்தார்.

கௌரவமான விருதாக பார்க்கப்படும் ஸ்பிரிட் ஒஃப் கிரிக்கெட் வீரர் விருதை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி வென்றார்.

உலகக்கிண்ண தொடரின் போது, அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான கோஷத்துக்கு மைதானத்தில் இரசிகர்களுக்கு கண்டனம் தெரிவித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.

எமர்ஜிங் வீரர் விருதை அவுஸ்ரேலியாவின் இளம் துடுப்பாட்ட வீரரான மார்னஸ் லபுஸ்சகன் வென்றார்.

அவர் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,022 ஓட்டங்களை குவித்தார். சராசரி 68.13 ஆகும்.

ரி-20 கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்கான வீரர் விருதை இந்தியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் வென்றார்.

குறிப்பாக சொந்த மண்ணில் நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கெதிரான ரி-20 போட்டியில், 7 ஓட்டங்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி தீபக் சஹர் சாதனைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டின் சிறந்த நடுவராக இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங்வொர்த் தெரிவு செய்யப்பட்டார்.

நட்பு நாடுகளின் சிறந்த வீரராக ஸ்கொட்லாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கைலி கொய்ட்சர் தெரிவு செய்யப்பட்டார்.

தனது வழிநடத்தலின் மூலம் அணியை ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான தகுதி போட்டிக்கு அழைத்துச் சென்றதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படவுள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது சராசரி 48.88 ஆகும்.

2019ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளும் அறிவிக்கப்பட்டன. இதில், இந்திய தலைவர் விராட் கோஹ்லி இரு அணிகளின் அணித்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் அணியில் ஐந்து அவுஸ்ரேலிய வீரர்கள், மூன்று நியூஸிலாந்து வீரர்கள், இரண்டு இந்திய வீரர்கள், ஒரு இங்கிலாந்து வீரர் இடம்பெற்றுள்ளனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், மயங்க் அகர்வால், டொம் லாதம், மார்னஸ் லபுஸ்சகன், விராட் கோஹ்லி, ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், பி.ஜே.வாட்லிங், பெட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நீல் வேக்னர், நாதன் லியோன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் அணியில் தலா நான்கு இந்திய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்களும், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்தில் அணிகளில் தலா ஒரு வீரரும் அடங்குகின்றனர்.

விராட் கோஹ்லி தலைமையிலான அணியில், ரோஹித் ஷர்மா, ஜோனி பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஜோஸ் பட்லர், ரோஸ் டெய்லர், பென் ஸ்டோக்ஸ், முஸ்தாஃபிஸுர் ரஹ்மான், ரஷித் கான், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Add new comment

Or log in with...