இடிச்சபுளி செல்வராஜை நெகிழ வைத்த எம்ஜிஆர் | தினகரன்


இடிச்சபுளி செல்வராஜை நெகிழ வைத்த எம்ஜிஆர்

தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருந்த சமயம். அப்போது எம்ஜிஆருடன் ஆரம்ப காலத்தில் உதவி இயக்குனராக வேலை செய்து பல படங்களில் அவருடன் நடித்தவர் செல்வராஜ் என்பவர். அவருக்கு திருமணம் ஏற்பாடானது. எம்ஜிஆருடன் இணைந்து நடித்த காலமோ வேறு, இப்போதோ நிலைமை வேறு. எல்லோருக்கும் கல்யாண பத்திரிகையை கொடுத்து கொண்டே வந்தார். அப்போது ஒருவர் "என்னப்பா, தலைவருக்கு பத்திரிகை வெக்கலையா?" என்று கேட்கவும் அதிர்ச்சியடைந்தார் செல்வராஜ். "யாருக்கு எம்ஜிஆருக்கா? என்னை எல்லாம் அவர் எப்படி ஞாபகம் வச்சிருக்க முடியும்?" என்றார். 

ராமாவரம் தோட்டம் "ஏம்ப்பா.. நீ அவரோட படங்களில் உதவி இயக்குனரா வேலை செஞ்சிருக்கே இல்லை, அப்பறம் என்ன? அவரை நேரில் பார்க்க முடியாது, உன் பத்திரிகையை அவருக்கு எப்படியாவது சேர்த்துடு, ஏதாவது உனக்கு உதவி செஞ்சாலும் செய்வார்" என்றார். உடனே ராமாபுரம் தோட்டத்துக்கு செல்வராஜ் சென்று, கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் தான் யார் என்பதை விளக்கினார். 

உடனே செக்யூரிட்டி, எம்ஜிஆருக்கு இன்டர்கொம்மில் தகவலை சொல்ல, அவரை பற்றி கேட்டறிந்த எம்ஜிஆரும் செல்வராஜை உள்ளே அழைத்து வருமாறு சொன்னார். அதிர்ச்சியுடன் உள்ளே நுழைந்தவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. அவரை அருகே அழைத்து நலம் விசாரித்து பழைய சம்பவங்களை சொல்லி மேலும் பூரிப்படைய வைத்தார் எம்ஜிஆர். உடனே கல்யாண பத்திரிகையை பிரித்து பார்த்தும் எம்ஜிஆர் முகம் மாறியது. "என்ன செல்வராஜ், உன் கல்யாணத்திற்கு நான் வரவேண்டும் என்ற எண்ணம் உனக்கு இல்லையா? எங்கே இதில் என் பெயர்"? என்று கேட்டார். 

உடனே செல்வராஜ், "நீங்கள் தெய்வம் ஐயா, உங்களை நேரில் பார்ப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லையே, என் பத்திரிகையை தொட்டு பார்த்ததே பெரிய பாக்கியம்" என்றார். உடனே வழக்கமான புன்முறுவலுடன் எம்ஜிஆர், "சரி தேதியை குறித்து கொள்கிறேன், நான் கண்டிப்பா கல்யாணத்துக்கு வருகிறேன், அதுக்காக புதுசா கல்யாண பத்திரிகையை என் பெயர் போட்டு அடிக்காதே" என்றார். செல்வராஜால் நடந்து முடிந்ததை நம்பவே முடியவில்லை. 

ஊரெல்லாம் எம்ஜிஆர் படத்துடன் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டன. இதைப் பார்த்த சிலர், "செல்வராஜ், இப்படி வீண் செலவு செய்யாதே, உனக்கே தெரியாமல் எப்பவாவது நீ அவரை அவமானப்படுத்தியிருப்பாய். அதை மனசில் வைத்து கொண்டு கல்யாணத்துக்கு வராமல் போய் உன்னை பழி வாங்குவார் என்று சொன்னார்கள். 

திருமண நாள் வந்தது. முகூர்த்த நேரமும் நெருங்கியது. ஆனால் எம்ஜிஆர் வரவில்லை. அவர் சார்பாக அவரது அண்ணன் எம்ஜி சக்கரபாணி வந்திருந்து சீர்வரிசையை தந்து மணமக்களையும் வாழ்த்திவிட்டு சென்றார். தவிர்க்க முடியாத காரணத்திற்காக எம்ஜிஆரால் வரமுடியவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. 

மறுநாள் மாமியார் வீட்டில் இருந்தார் செல்வராஜ். திடீரென்று நூற்றுக்கணக்கான பொலிஸார் செல்வராஜ் தங்கியிருந்த இடத்தில் குவிந்து, "யாரப்பா செல்வராஜ்?" என்று கேட்டனர். வெளியே வந்த செல்வராஜிக்கு முதல்வர் எம்ஜிஆர் வருகிறார் என்று சொல்லப்பட்டதும் தூக்கி வாரிப்போட்டது. காரில் வந்து இறங்கினார் எம்ஜிஆர். சுற்றுமுற்றும் உள்ள வீடுகளில் இருந்ததிலேயே ஒரு நல்ல சேர் தேடி எடுத்து வெட்ட வெளியில் போட்டார் செல்வராஜ்.  

அதனை பார்த்த எம்ஜிஆர், "ஏன், நான் உள்ளே வரக்கூடாதா? என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்துவிட்டார். மோர் கொடுத்ததும் அதை வாங்கி குடித்தார் எம்ஜிஆர் பிறகு செல்வராஜின் மாமியார் வீட்டு ஆட்களிடம், யாரும் எதற்கும் கவலைப்படாதீர்கள், என்ன உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் என்று சொல்லிவிட்டு காரில் ஏறினார். 

பிறகு செல்வராஜை மட்டும் தன்னுடன் காரில் ஏறி உட்கார சொன்னார். பிறகு செல்வராஜின் கையில் கெட்டியாக பிடித்து கொண்டார் எம்ஜிஆர், "நீ என் மேல கோபமாக இருப்பாய் என்று தெரியும். நான் உன் கல்யாணத்தை நடத்தி வைத்திருந்தால் உனக்கு கௌரவமாக இருந்திருக்கும் என்று நினைத்திருப்பாய்.  

 நானும் உன் கல்யாணத்துக்கு வரணும்னுதான் நினைச்சேன். ஆனால் நீ கிளம்பும்போது, "நான் வந்துதான் தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைக்கணும்னு" சொன்னே, நான் பிள்ளைகுட்டி இல்லாதவன், என் அண்ணனோ பிள்ளைகளை பெற்றவர். அதனால்தான் நான் வராமல் என் அண்ணனை நடத்தி வைக்க சொன்னேன்" என்றார் எம்ஜிஆர். இதைக்கேட்டதும் செல்வராஜிற்கு கண்ணீர் தாரை தாரையாக வழிந்தபடியே இருந்தது. Add new comment

Or log in with...