அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை

அவன்கார்ட் தலைவர் நிஸ்ஸங்க பிணையில் விடுதலை-Avant Garde-Nissanka Senadhipathi Released on Bail

- 7,573 குற்றச்சாட்டுகளில் 19 மாத்திரம் வலிதானது
- பிரதிவாதிகள் ஐவருக்கு விடுதலை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த வழக்கு இன்று (17) மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் குறித்த வழக்கு தொடர்பில் முன்வைக்கப்பட்ட 7,573 குற்றச்சாட்டுகளில் 19 குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இவ்வழக்கைத் தொடர முடியும் எனத் தெரிவித்து, அவ்வழக்கின் பிரதிவாதிகளாக தெரிவிக்கப்பட்டிருந்த ஐவரை, அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டது.

ரக்னா லங்கா நிறுவனம், அவன்கார்ட் மெரிடைம் சர்விசஸ், முன்னாள் ரக்னா லங்கா தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெனாண்டோ, ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கே.பி. எகொடவெல, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் டி.எம்.எஸ். தமயந்தி ஜயரத்ன ஆகிய பிரதிவாதிகளே இவ்வாறு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுக்கொண்டு நாடு திரும்பியபோதே, அவர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...