பொதுத்தேர்தலுக்கு தயாராகும் கட்சிகள்

நாடொன்றில் நடத்தப்படும் சுயாதீனமான தேர்தலை அடிப்படையாகக் கொண்டே அந்த நாட்டின் ஜனநாயகம் பற்றி உலக நாடுகள் முடிவுக்கு வரும். உரிய காலத்தில் தேர்தல்களை நடத்துவது, நடத்தப்படும் தேர்தல் நீதியானதாகவும் சுயாதீனமானதாகவும் முன்னெடுக்கப்படுவது போன்றன இவற்றின் குணாம்சங்களாகும்.

இலங்கையைப் பொறுத்த வரையில் தேர்தல் நடத்தப்படுவதில் ஒருசில தாமதங்கள் இருந்தாலும் ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் தொடர்ந்தும் நடத்தப்படுகின்றன. இதற்கு சிறந்த உதாரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைக் குறிப்பிட முடியும். கடந்த காலங்களில் தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட போதும், இம்முறை ஜனாதிபதித் தேர்தல் எந்தவித அசம்பாவிதங்களும் அற்ற தேர்தலாக அமைந்தது என சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் பாராட்டியிருந்தனர்.

இவ்வாறான ஜனநாயக செயற்பாட்டில் பங்கெடுக்க வேண்டியது மக்களின் கடமையாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது ஜனநாயகக் கடமையை சரியான முறையில் நிறைவேற்றியிருந்தார்கள் என்றே கூற வேண்டும். நாட்டில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்டு, நாட்டின் எதிர்காலத்துக்கு யார் பொருத்தமானவர் என்பதை மக்கள் தமது ஜனநாயக உரிமையின் மூலம் தெரிவு செய்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் மக்கள் தமது மற்றுமொரு ஜனநாயகக் கடமையை எதிர்வரும் சில மாதங்களில் நிறைவேற்ற வேண்டியுள்ளது. அதாவது பாராளுமன்றத்துக்கு தமக்கான பிரதிநிதிகளை அனுப்பும் பொதுத் தேர்தலாகும். இத்தேர்தலானது வாக்காளர்களாகிய நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியமானதும், பொறுப்புமிக்கதுமான தேர்தலாகும். தம்மை யார் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தாமே தீர்மானித்து அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கி பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைப்பர். இச்சந்தர்ப்பத்தில் தமக்கான பிரதிநிதி யார் என்பதைத் தெரிவு செய்வதில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

சுபீட்சமான நாடு, ஒழுக்கம் நிறைந்த நாடு என்ற தெனிப்பொருளில் தனது சேவையை ஆரம்பித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தொலைநோக்கு சிந்தனையை செயற்படுத்துவதற்கும், அதனை பலப்படுத்துவதற்கும், ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதற்குமான பிரதிநிதிகளை தெரிவு செய்து பாராளுமன்றத்துக்கு அனுப்புவதே வினைத்திறனானதாக இருக்கும்.

கடந்த காலங்களில் தாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்த பிரதிநிதிகள் எவ்வாறானவர்கள், கடந்த காலங்களில் அவர்களின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்தன போன்ற பின்னணி ஆய்வுகளை ஒவ்வொரு வாக்காளர்களும் மேற்கொள்ள வேண்டும்.

 பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் தனக்கு கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதித்துறையினர், அரசாங்க அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் எனப் பலருடனும் நடத்திய இரகசிய தொலைபேசி உரையாடல்களை புதிவு செய்து அவற்றை தற்பொழுது பகிரங்கப்படுத்தியிருக்கும் மக்கள் பிரதிநிதிகள் போன்றவர்களை மீண்டும் தெரிவு செய்ய வேண்டுமா என்பதை வாக்காளர்களாகிய நாமே சிந்திக்க வேண்டும்.

அது மாத்திரமன்றி பாராளுமன்றத்துக்குள் மிளகாய்த் தூள் தாக்குதல் நடத்தி, பாராளுமன்றத்தை கேலிக்கூத்தாக்கிய அரசியல்வாதிகள், மக்கள் பணத்தை மோசடி செய்தவர்கள் என பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை கொண்டுள்ளவர்களை எமது பிரதிநிதிகளாக மீண்டும் அனுப்பப் போகின்றோமா என்பதை வாக்காளர்களாகிய நாமே சிந்திக்க வேண்டும்.

அதுமாத்திரமன்றி பல தசாப்தங்களாக தம்மைத் தாமே மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொண்டு தள்ளாத வயதிலுள்ளவர்கள் பற்றியும் வாக்காளர்கள் சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டை சிறப்பான பாதையில் கொண்டு செல்லக் கூடிய துறைசார் நிபுணத்துவம் மிக்க இளமையான பலர் எம்மிடையே காணப்படுகின்றனர். அவ்வாறானவர்களுக்கு முன்னுரிமையளிப்பது பற்றி சிந்திப்பதற்கான காலம் தோன்றியுள்ளது. பல தசாப்தங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதும் அவர்களால் எந்தப் பயனும் ஏற்படவில்லையென தோன்றும் நபர்களுக்குப் பதிலாக புதியவர்களை பாராளுமன்றத்துக்கு அனுப்புவது பற்றியும் வாக்காளர்கள் கவனம் செலுத்துவது நாட்டுக்கு சிறப்பானதாக இருக்கும்.

இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி கூறிய கருத்து ஒன்று தொடர்பில் ஊடகங்கள் பல முக்கியத்துவம் அளித்திருந்தன. அதாவது தனக்கு ஆதரவு வழங்கினார்கள் என்பதற்காக குற்றச்சாட்டுக்கள் உள்ள எவருக்கும் பதவிகளை வழங்கப் போவதுமில்லை, அவ்வாறானவர்களுக்கு இடமளிக்கப் போவதுமில்லையெனக் கூறியிருப்பதாக அந்த ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. இதனை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது ஜனாதிபதி தனது நிர்வாகப் பதையில் தெளிவான சிந்தனையுடன் இருப்பதாகவே தெரிகிறது. அது மாத்திரமன்றி புதிய உறுப்பினர்கள் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதிலும் அவர் அதிக அக்கறை காண்பிப்பதாகத் தெரியவருகிறது.

அதேநேரம், வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள் பொதுத் தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளன. வழமையான உசுப்பேற்றும் அரசியல் பேச்சுக்களுக்குள் மட்டுப்பட்டு விடாது பரந்துபட்ட ரீதியில் தொலைநோக்கு சிந்தனையில் யோசித்து சிறுபான்மை வாக்காளர்கள் செயற்பட வேண்டியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போகின்றோமா இல்லையா என்பது பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாது, எந்தத் தரப்பில் இருந்தாலும் தம்மை தெரிவு செய்து அனுப்பிய மக்களுக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவும் வகையில் மக்கள் பிரதிநிதிகள் செயற்பட வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகவுள்ளது.

வெறுமனே தமது சுயநல விருப்பு வெறுப்புக்களுக்கு முன்னுரிமையளிக்காது மக்களின் அன்றாடப் பிரச்சினை உள்ளிட்ட பலவற்றுக்கு தீர்வை வழங்கக் கூடிய வகையிலான முடிவுகளை எடுப்பது சிறப்பானதாக இருக்கும்.

குறிப்பாக வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் கடந்த காலங்களைப் போன்று மக்களை வீணாகக் குழப்பி விடாது மக்கள் சுயமாக சிந்திப்பதற்கான களத்தை வழங்க வேண்டும். இதுவே நாட்டின் எதிர்காலத்துக்கு சிறந்ததாக அமையும்.

சாரங்கன்...


Add new comment

Or log in with...