மோடிக்கு எதிரான நிலைப்பாட்டில் மாநில அரசுகள்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் அதனோடு சேர்ந்து வரக் கூடிய தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிரான போராட்டத்தில் எதிர்பாராத  நேசசக்திகளாக இந்தியாவில்  எதிர்க் கட்சிகளின் ஆட்சியில் உள்ள மாநிலங்களின் முதலமைச்சர்கள் வெளிக்கிளம்பியிருக்கிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஒரு சில நாட்களில் பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள் அந்த சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிராக உறுதியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்கள். நாடெங்கும் எதிர்ப்பியக்கங்கள் தீவிரமடையத் தொடங்கியதும் ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாய்க்கும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதையடுத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கின்ற மாநில அரசாங்கங்களின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்து விட்டது.

இந்த எதிர்ப்பின் தாக்கம் மட்டுப்பாடுகளைக் கொண்டதாக இருக்கக் கூடும். குடியுரிமை என்பது மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் வருகின்ற விடயமாகும்.  அது தொடர்பான சட்டச் செயன்முறைகளைத் தீர்மானிப்பதில மாநிலங்களுக்கு எந்த வகிபாகமும் இல்லை. ஆனால், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பணி தொடர்பிலான பொறுப்பு மாநிலங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய சட்டச் செயன்முறைகளில் குடியுரிமைக்கான விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு இருக்கிறது. அவ்வாறு பரிசீலித்த பிறகு அனுமதிக்காக விண்ணப்பங்களை மாநில அரசாங்கத்தினூடாக மத்திய உள்துறை அமைச்சுக்கு ஆட்சியர் அனுப்ப வேண்டும். மேலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிருவகிப்பதில் மாநில இயந்திரம் இன்றியமையாததாகும்.

கொள்கையளவில் மாநிலங்கள் குடியுரிமை விணணப்பங்களை பரிசீலனை செய்வதை சுலபமாக நிறுத்தி, தேசிய குடிமக்கள் பதிவேட்டை நிருவகிக்க அவற்றின் நிருவாக  இயந்திரத்தை ஈடுபடுத்துவதற்கு மறுத்து விடலாம்; அவ்வாறு செய்வதன் மூலம்  செயன்முறைகளுக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தலாம். ஆனால், இங்குதான் சிக்கல் இருக்கிறது.

நடைமுறைப்படுத்தல் விதிகளை மீளவரைந்து, குடியுரிமை விண்ணப்பங்களை கையாளுவதற்கென்று குறித்துரைக்கப்பட்டிருக்கும் அதிகாரிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு மத்திய அரசாங்கத்துக்கு அதிகாரமளிக்கும் ஏற்பாடு ஒன்று  குடியுரிமை திருத்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது -- இதன் மூலமாக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விடயத்தில் மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தை தவிர்த்து விட முடியும். இது தவிர, தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு அத்திவாரமாக அமையப் போகின்ற தேசிய சனத்தொகை பதிவேடு தொடர்பில் பெரும்பாலான மாநிலங்களின் அரசாங்கங்கள் (மேற்கு வங்கம் தவிர) இன்னமும் நிலைப்பாடொன்றை எடுக்கவில்லை. தேசிய சனத்தொகை பதிவேடு மத்திய அமைச்சரவையால் கடந்த வாரம் அங்கீகரிக்கப்பட்டது.

எது எவ்வாறிருந்தாலும், இந்த எதிர்ப்பு வெளிப்பாட்டின் மூலமான அரசியல் குறியீடு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். நரேந்திர மோடி அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சித் திட்டத்துக்கு எதிராக முதலமைச்சர்கள் கூட்டாக வெளிப்படையாக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து தங்களது சமஷ்டி உரிமைகளை துணிச்சலாக வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதற் தடவையாகும். பெரும்பான்மைவாதத்தை நோக்கிய இந்தியாவின் தற்போதைய பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமைய முடியுமா? குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்து வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மத்தியமய அதிகாரத்துவப் போக்கிற்கு சமவலுவான ஒரு  எதிரீடாக மாநிலங்கள் வெளிக்கிளம்புமா?

2014ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த நாள் முதலாக மோடி அரசாங்கம் 'கூட்டுறவு  சமஷ்டி முறை' 'போட்டிக்குரிய சமஷ்டி முறை'  என்றெல்லாம் அலங்காரப் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகின்ற போதிலும், அரசியல், நிருவாக மற்றும் நிதியியல் அதிகாரங்களை மத்தியமயப்படுத்துவதிலேயே மிகவும் கவனமாக நாட்டம் காட்டியிருக்கிறது.மாநிலங்களிடமிருந்து பலமான எதிர்ப்பு இதற்கு கிளம்பியதாக இல்லை.2019மேயில் மீண்டும் பதவிக்கு வந்த பிறகு மிகவும் கூடுதலான அளவுக்கு மத்தியமயத்தை வலிமையாக முன்னெடுப்பதில் அரசாங்கம் இறங்கியிருக்கிறது. --

குடியுரிமை, அடையாளம் தொடர்பில் ஒரே சீர்மையான கருத்தைத் திணிப்பதில் நாட்டங் கொண்ட போக்காக இது இருக்கிறது. இந்த மார்க்கத்தில் முன்னெடுக்கப்பட்ட முதலாவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான நடவடிக்கையாக 2019ஓகஸ்டில் இந்திய அரசியலமைப்பின் 370வது சரத்து ரத்துச் செய்யப்பட்டமையை கூற முடியும். அந்த சரத்தின் வாயிலாக ஜம்மு --காஷ்மீருக்கு இருந்த விசேட அந்தஸ்து இல்லாமல் செய்யப்பட்டதற்கு அப்பால், அந்த மாநிலத்தின் அரையளவான சுயாட்சி அந்தஸ்தை யூனியன் பிரதேசமாக தரங்குறைத்த செயல்  இந்தியாவின் சமஷ்டி அபிலாசையின் மையக்கோட்பாட்டு அம்சத்தை மலினப்படுத்தியிருக்கிறது. இந்தியாவின் பன்மொழி, பல்லின மற்றும் பலமத அடையாளங்களுக்கு அமைதியான முறையில் இடங்கொடுத்து அரவணைப்பதே அந்த அபிலாசையாகும்.

2019ஓகஸ்ட் நிகழ்வுகளின் பாரதூரத்தன்மையையும் இந்தியாவின் சமஷ்டி அபிலாசையின் சிறப்புப் பண்புக்கு ( Central tenet of India's federal  aspiration ) அவை தோற்றுவித்திருக்கும் சவால்களையும் பொருட்படுத்தாமல், பெரும்பாலான மாநில அரசாங்கங்களும் பிராந்தியக் கட்சிகளும் மோடி அரசாங்கத்தின் தீர்மானத்தை தீவிரமாக ஆதரித்தன. உண்மையில் மத்தியமயத்தை நோக்கிய ஆபத்தானதொரு  பயணத்தை இந்தியா மேற்கொண்டிருக்கிறது. சமஷ்டிவாதத்தை ஆதரித்தவர்கள் வெகு சிலராகவே இருந்தனர். மாநில அரசாங்கங்களும் கூட  அந்த இலட்சியத்துக்காக போராடத் தவறின.

ஆனால், இந்தப் போக்கிற்கு மறுதலையான போக்கை கடந்த சில வாரங்களாகக் காணக் கூடியதாக இருக்கிறது.  நாடு பூராவும் தீவிரமடைந்திருக்கும் எதிர்ப்பியங்கள் உணர்த்துகின்ற மையச் செய்தி பாரதிய ஜனதாவினால் திணிக்கப்படுகின்ற குடியுரிமை பற்றிய ஒரே சீர்மைக் கருத்து திட்டவட்டமாக நிராகரிக்கப்படுகின்றது என்பதும் இந்தியாவின் பன்முகத்தன்மை மீட்டெடுக்கப்படுகிறது என்பதுமாகும். இந்த மீட்டெடுப்பு உணர்வின் ஊடாகத்தான் இந்தியாவின் சமஷ்டி அபிலாசை மீள் எழுச்சியை காண்கின்றது. இடம்பெற்று வரும் போராட்டங்களுக்கு தங்கள் பிரதிபலிப்பை துரிதமாகவே வெளிப்படுத்தியிருக்கும் மாநில அரசாங்கங்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கும் எதிரான நிலைப்பாடொன்றை எடுக்கின்றன.

மாநிலங்களில் அதிகாரப்பிடியை  பாரதிய ஜனதா கட்சி இழந்து கொண்டு வரும் பின்புலத்திலேயே இந்த சமஷ்டி உணர்வு மீள்எழுச்சியும் இடம்பெறுகிறது. வாக்காளர்கள் மாநில தேர்தல்களுக்கும் தேசிய தேர்தல்களுக்கும் வேறுபட்ட தூண்டுவிசைகளுடன் தங்கள் பிரதிபலிப்புக்களை வெளிக்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இறுதியாக நடைபெற்ற மூன்று மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல்களின் ( ஜார்க்கண்ட், ஹரியானா, மகாராஷ்டிரா ) போக்குகள்  மாநில தேர்தல்கள்  பெருமளவுக்கு  உள்ளூர்மயப்பட்டு விட்டதையும் அவற்றில் போட்டியிடுதல் மாநிலத்திற்கு உரித்தான பிரச்சினைகளினாலேயே நிர்ணயிக்கப்படுவதையும் புலப்படுத்துகின்றன போலத் தோன்றுகிறது.

முன்னைய தேர்தல்களைப் போலன்றி இப்போது மாநிலத்தேர்தல்களில் வாக்காளர்கள் வெளிக்காட்டுகின்ற  விருப்பத் தெரிவுகள் அவர்கள் தேசிய அரசாங்கத்தை தெரிவு செய்வதற்கு  வாக்களிக்கும் போது பெருமளவுக்கு மாறி விடுகின்றன. 2018டிசம்பரில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சதிஷ்கார் ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பின்னடைவைக் கண்ட பாரதிய ஜனதா நான்கு மாதங்களுக்குப் பிறகு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெற்ற பெருவெற்றி இதற்கு பிரகாசமான உதாரணமாகும். நான்கு தசாப்தங்களில் முதற் தடவையாக தேசிய அரசியலும் மாநில அரசியலும் மிகவும் வேறுபட்டவையாக தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. இந்த தோற்றப்பாட்டை சமஷ்டிவாதம் ஆழமாவதன் ஒரு அறிகுறி என்று ஒரு வகையில் அர்த்தப்படுத்தலாம்.

(இந்துஸ்தான் டைம்ஸ்)


Add new comment

Or log in with...