உசுப்பேற்றும் தேசங்கள்

லிபியாவில் போர் நிறுத்தத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். ரஷ்யாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் ஐ.நா ஆதரவில் தலைநகர் திரிபோலியை தளமாகக் கொண்டு ஆட்சி புரியும் அரசின் தலைவர் பயஸ் அல் சர்ராஜ் கைச்சாத்திட்டுவிட்டார். மறுபுறம் நாட்டின் கிழக்கில் யாருக்கும் கட்டுப்படாமல் அதிகாரத்தில் இருக்கும் ஜெனரல் கலீபா ஹப்தர் கையெழுத்திடுவதுதான் பாக்கி.

ஏற்கனவே ஹப்தர் யுத்தநிறுத்தத்திற்கு உடன்பட்டு நாட்டில் பெயருக்கு யுத்த நிறுத்தமும் அமுலில் இருந்தது. ஆனால் ஹப்தர் உடனடியாக கையெழுத்திடவில்லை. நாளை காலை பார்ப்போமே என்று தட்டிக் கழித்தார். கடந்த ஜனவரி 14ஆம் திகதி காலை ஹப்தரை தேடினால் ஆளை காணவில்லை. படுக்கைக்கே தெரியாமல் மொஸ்கோவில் இருந்து ஓடிவிட்டார்.

லிபியாவில் போர் நிறுத்தம், அரசியல் தீர்வு, அமைதி பற்றிய கனவுகள் அத்தோடு கலைந்தது. மறுபடியும் குழப்பமான அரசியல், சண்டைகளுக்கு பஞ்சமில்லை.

2011ஆம் ஆண்டு முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட பின் லிபியாவின் அரசியல் இப்படித்தான். எந்த பிடிமானமும் இல்லாமல் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் கதையாகிவிட்டது. அதிலும் கலீபா ஹப்தரை பற்றி சொல்லவே தேவையில்லை. பிராந்தியத்தில் தான் ஒரு ஹீரோ ஆகும் நினைப்பில் லிபியாவை கொழுத்திக் கொண்டிருக்கிறார்.

ஹப்தரைச் சொல்லி குற்றமில்லை, லிபியாவின் அரசியல் குழப்பங்களுக்கு அந்நாட்டு அரசியல் பின்னணி காரணமல்ல. பிராந்திய அரசியல் கயிறிழுப்புத் தான் முழுக் காரணம்.

யுத்தநிறுத்தத்திற்கு உடன்பட்டு மொஸ்கோ வரை சென்று இப்படி பாதியிலேயே வருவதற்கு ஹப்தருக்கு எங்கிருந்து தைரியம் வந்தது. பெங்காசியை தளமாகக் கொண்டு தன்னைத் தானே லிபிய தேசிய இராணுவம் என்று அழைத்துக் கொள்ளும் ஹப்தரின் படை அண்மையில் அந்நாட்டின் முக்கிய நகரான சிர்த்தை கைப்பற்றியது, கடந்த ஏப்ரல் தொடக்கம் தலைநகர் திரிபோலியை கைப்பற்ற தீராது சண்டையிடுகிறது. 

இருந்து நின்று நடத்தும் வான் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் எத்தனையோ பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முன்னர் கடாபி இராணுவத்தில் இருந்த அந்த 76வயது முதிய இராணுவ வீரருக்கு தைரியம் இருந்தால் மாத்திரம் போதாது பணம் வேண்டும், படை பலம் வேண்டும், சர்வதேச ஆதரவு வேண்டும்.

ஹப்தருக்கு பணம், ஆயுதங்களை அள்ளிவழங்கும் நாடுகளில் முக்கியமானது ஐக்கிய அரபு இராச்சியம். லிபியா மீதான 2011ஆயுதத் தடை ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பொருட்டல்ல.

ஹப்தருக்கு முழுமையான வான் உதவி வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியம் சீனா தயாரிப்பான விங் லூங் ஆளில்லா விமானங்களையும் அள்ளிக் கொடுக்கிறது. வான் பாதுகாப்பு முறை, நவீன ரக ஆயுதங்கள் ஹப்தரிடம் கிடைப்பதற்கு முதல் காரணம் ஐக்கிய அரபு இராச்சியம்தான்.

சவூதி அரேபியா, எகிப்து நாடுகளும் ஹப்தர் சண்டித்தனம் காட்டுவதற்கு பின்னால் உசுப்பேற்றும் வேலையை செய்கின்றன.

லிபியாவில் எழுச்சி பெறும் அரசியல் இஸ்லாத்தை ஒடுக்குவதற்கு சரியான ஆள் ஹப்தர் என்ற எதிர்பார்ப்பிலேயே இந்த நாடுகள் கண்மூடித் தனமாக உதவி செய்கின்றன.

லிபியாவின் ஐ.நா ஆதரவு அரசில் செல்வாக்கு மிக்க சக்தியாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இருப்பதுதான் இந்த அரபு நாடுகளின் கோபத்திற்கு காரணம். மிதவாத அரசியல் இஸ்லாம் பேசும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு எங்கு முளைத்தாலும் அதனை கிள்ளி எறிய இந்த நாடுகள் எந்தத் தீவிரத்திற்கும் போகும் என்பது ஊருக்கே தெரிந்த கதை.

மறுபக்கம் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் வாய்கிழியக் கத்தினாலும் பின்னால் அவரும் ஹப்தருக்குத்தான் உதவுகிறார். திரிபோலி மீதான ஹப்தரின் தாக்குதலை நிறுத்தும்படி ஐரோப்பிய ஒன்றியம் விடுக்கவிருந்த அறிக்கையை தடுத்து நிறுத்தியது பிரான்ஸ்தான்.

கடந்த ஏப்ரலில் 13பிரான்ஸ் நாட்டவர்கள் லிபியாவுக்குள் நுழைய முயன்றபோது மொரோக்கோ தடுத்தது, பிரான்ஸுக்கு சொந்தமான ஏவுகணைகள் ஹப்தர் துருப்புகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது, 2016இல் பிரான்ஸ் ஹெலி ஒன்று பெங்காசியில் விழுந்து இருவர் கொல்லப்பட்டது எல்லாவற்றையும் எந்தக் கணக்கில் சேர்ப்பது.

பிரான்ஸ் போன்றே இரட்டை வேடம் போடும் மற்றொரு நாடு ரஷ்யா. திரிபோலி தாக்குதலை ஹப்தர் படை நிறுத்த பாதுகாப்புச் சபை தீர்மானம் கொண்டுவந்தபோது அதனை தடுத்தது அமைதி பற்றி பேசும் இதே ரஷ்யாதான். ரஷ்யாவின் தனியார் படை ஒன்று ஹப்தருடன் சேர்ந்து சண்டை இடுவதாக ஒரு பேச்சு.

2015ஆம் ஆண்டு லிபியாவில் ஐ.நா ஆதரவில் அரசு ஒன்றை அமைத்தபோது அதற்கு உதவிய நாடுகளில் அமெரிக்காவும் இருந்தது. ஆனால் 2017ஆம் ஆண்டு ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் லிபியா விவகாரத்தில் தலையிடப்போவதில்லை என்று அறிவித்தார்.

ஆனால் அண்மைக் காலமாக அவர் ஹப்தர் பக்கம் சாய்வது போல் அறிக்கைகளை விடுகிறார். ஆனால் அமெரிக்கா இன்னும் வெளிப்படையான உதவிகளை வழங்கவில்லை.

அதேபோன்று சூடான் ஹப்தர் படைக்கு இராணுவத்தை அனுப்பி உதவுவது ஊருக்கே தெரிந்த செய்தி.

மறுபக்கம் ஐ.நா ஆதரவு அரசு ஹப்தர் படையின் தாக்குதல்களுக்கு ஈடுகொடுத்து தனது நிலையை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கும் பெரிய சக்திகள் என்றால் அது துருக்கி மற்றும் கட்டார் நாடுகள்.

திரிபோலி அரசுக்கு ஆதரவாக துருக்கி தனது படைகளை லிபியாவுக்கு அனுப்பி இருக்கிறது. இது எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை.

லிபியா ஹப்தரிடம் வீழ்ந்துவிட்டால் அது தமது பிராந்திய செல்வாக்கிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று துருக்கி அஞ்சுவதில் நியாயம் இருக்கிறது.

அதாவது மத்தியதரைக் கடலில் தனது நலனுக்காக ஐக்கிய அரபு இராச்சியம், எகிப்து மற்றும் கிரேக்கத்திடம் கைகட்டி நிற்க துருக்கி தயாரில்லை.

எனவே லிபிய பிரச்சினையை தீர்க்க ஹப்தரிடமும், திரிபோலி அரசிடமும் பேசி பயனில்லை. அதற்கு பேச வேண்டிய ஆட்களே வேறு.

எஸ். பிர்தெளஸ்


Add new comment

Or log in with...