தமிழகத்துக்கான பா.ஜ.கவின் புதிய தலைவர் யார்? | தினகரன்


தமிழகத்துக்கான பா.ஜ.கவின் புதிய தலைவர் யார்?

தமிழக பா.ஜ.கவிற்கு புதிய தலைவர் யார் என்று இன்று பெரும்பாலும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக பா.ஜ.க கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக தமிழக பா.ஜ.க தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. தெலுங்கானா ஆளுநராக தமிழக முன்னாள் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி ஏற்றார். அவர் சென்ற பின்னர் தமிழக பா.ஜ.கவிற்கு புதிய தலைவர் தெரிவு செய்யப்படவில்லை.

தமிழக பா.ஜ.கவின் அடுத்த தலைவர் யார் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது. இதற்காக தேசிய பா.ஜ. தலைமை பல்வேறு ஆலோசனைகளை நடத்தியது. ஆனால் இதில் சரியாக முடிவு எடுக்க முடியாமல் இருந்தது.

நேற்று பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து பா.ஜ.கவில் தேசிய செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா எதிர்வரும் 20ம் திபதி பா.ஜ.க தேசிய தலைவராக அறிவிக்கப்படுகிறார். அவர் 22ம் திகதி பதவியேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் கட்சியில் போட்டியின்றி தெரிவாக இருக்கிறார்.

அதேபோல் இன்னொரு பக்கம் மீண்டும் பா.ஜ.க புதுச்சேரி மாநில தலைவராக வி.சாமிநாதன் தெரிவானார். நேற்றுமுன்தினம் இதற்கான அறிவிப்பு வெளியானது. இதேபோல் தமிழக பா.ஜ.க தலைவருக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

இந்த தலைவர் பதவிக்காக எச். ராஜா, பி. முருகானந்தம், சி.பி ராதாகிருஷ்னன், வானதி ஸ்ரீநிவாசன் ஆகியோர் இடையில்தான் கடுமையான போட்டி நிலவி வருகிறது. ஆனால் இவர்கள் இல்லாமல் புதுமுகம் ஒருவர்தான் தலைவராக வருவார். தேசிய அரசியலில் இருக்கும் ஒருவர் தலைவராக வர வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

பெரும்பாலும் மத்தியில் இருக்கும் அமைச்சர் ஒருவர், தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, தமிழக பா.ஜ.க தலைவராக வாய்ப்புள்ளது. அவருக்கு முதல்வராகும் கனவு உள்ளது. அதனால் அவருக்கு தமிழக பா.ஜ.க தலைவர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

அமைச்சராக இருக்கும் அவர் மீது சில புகார்கள் உள்ளன. அதனால் அவரின் அமைச்சரவைக்கு வேறு நபரை நியமிக்க பா.ஜ.க ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக இன்று பெரும்பாலும் அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...