ஆசிரியர் பற்றாக்குறையுடன் மாத்தறை தமிழ்ப் பாடசாலைகள் | தினகரன்


ஆசிரியர் பற்றாக்குறையுடன் மாத்தறை தமிழ்ப் பாடசாலைகள்

தமிழ் மாணவர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்

தென்மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் ஒன்றாகிய மாத்தறை மாவட்டம் நாட்டின் கல்வித்துறையில் உயர்ந்த மட்டத்திலுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. பண்டைய காலத்தில் 'உறுகுணை' என்று கூறப்பட்ட இப்பிரதேசத்தில் அமைந்திருந்த தொண்டீஸ்வரம் இலங்கையில் இந்துக்களின் பண்டைய இருப்பு, சிறப்பு, வளம் போன்றவற்றிற்குக் கட்டியம் கூறி நிற்கின்றது.

இலங்கையின் வடக்கு முனையாகப் பருத்தித்துறையைக் குறிப்பிடுவது போன்று தென்முனையாக தேவேந்திரமுனையைக் குறிப்பிடுவது நமது வழக்கம். ஆதியில் 'தேவநகர்' என்றும் வழங்கப்பட்ட தேவேந்திர முனையை அண்டிய பிரதேசம் இன்று 'தெவிநுரவ' என்று சிங்கள மொழியில் அழைக்கப்படுகின்றது.

2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இந்தியாவிலிருந்து எழுநூறு தோழர்களுடன் இலங்கைத் தீவில் கரையொதுங்கிய விஜயனுடன் உபதிஸ்ஸன் என்ற பிராமணனும் இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. குறித்த அந்தப் பிராமணன் இலங்கைத்தீவின் நாலாபக்கங்களிலும் இருந்த பண்டைய ஐந்து சிவாலயங்களுக்குச் சென்று தரிசித்து, வழிபாடு செய்ததாகவும் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாவட்டத்தின் கீரிமலையிலுள்ள நகுலேஸ்வரம், புத்தளம் மாவட்டத்தில் சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம், மன்னார் மாவட்டத்திலுள்ள கேதீஸ்வரம், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலையிலுள்ள கோணேஸ்வரம் ஆகியவற்றுடன் தென்மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனையில் (தெவிநுவர) அன்றிருந்த தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து சிவாலயங்களே அவை. தொண்டீஸ்வரம் சந்திரசேகரேஸ்வரம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றது.

நாயன்மார்களால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களின் பெயர்களுக்கு முன்னால் 'திரு' என்ற சிறப்பு இணைக்கப்பட்டதால் கோணேஸ்வரம் திருக்கோணேஸ்வரம் என்றும் கேதீஸ்வரம் திருக்கேதீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

குறித்த ஐந்து சிவாலயங்களையும் 2500 ஆண்டுகளுக்கு முன்பு உபதிஸ்ஸன் சென்று வழிபட்டமையை சேர். போல். ஈ பிரிஸ் என்ற சிங்கள வரலாற்று ஆய்வாளர் தனது ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். போர்த்துக்கெயரின் ஆக்கிரமிப்பையடுத்து ஐந்து சிவாலயங்களும் சிதைக்கப்பட்ட போதும், தொண்டீஸ்வரம் தவிர்ந்த ஏனைய நான்கு சிவாலயங்களும் மீளக்கட்டியெழுப்பப்பட்டன. ஆனால் தொண்டீஸ்வரம் திருமாலின் திருத்தலமாக மீளமைக்கப்பட்டு இன்று தென்னிலங்கையின் பிரசித்திபெற்ற விஷ்ணுகோயிலாக விளங்குகின்றது. ஆண்டு தோறும் மகோற்சவங்களும் நடைபெற்று வருகின்றன.

மாத்தறை மாவட்டத்திலுள்ள பாரம்பரிய சிங்கள மக்களின் நல்லபெரும, இளைய பெரும, குமாரப்பெரும, அழகப்பெரும, வீரப்பெரும மற்றும் வீரக்கோன், அழகக்கோன், தென்னக்கோன் போன்ற தமிழ் தொழியுடன் தொடர்புபட்ட பெயர்கள் அமைந்திருப்பது குறிப்பிடக் கூடிய சிறப்பு ஆகும். பெரும என்று முடிவுறும் பெயருடன் ‘ன்’ அல்லது ‘ள்’ என்ற மெய் எழுத்தை இணைக்கும் போது தூய தமிழ் கருத்து வெளிப்படுகின்றது. 'கோன்' என்பது அரசனைக் குறிக்கும் தமிழ்ச் சொல். தமிழ்மொழியில் கருத்துள்ள அப்பெயர்களுக்குச் சிங்கள மொழயில் கருத்தில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று ரீதியாகவும், பாரம்பரிய ரீதியாகவும் ஆராயும் போது மாத்தறை மாவட்ட சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் அதே போல் இந்துக்களுக்கும், பௌத்தர்களும் பாரம்பரிய பண்டைய பிணைப்பிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மாத்தறை மாவட்டம் சிங்கள பௌத்த மக்கள் அதிகமாக வாழும் பிரதேசம் என்று கூறப்பட்டாலும் தமிழர்களும், முஸ்லிம்களும் இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இம்மாவட்டத்தில் ஐந்து தமிழ்ப் பாடசாலைகளும், ஒரு இருமொழிப் பாடலையுமான தமிழ் மாணவ, மாணவியர் கற்கும் ஆறு பாடசாலைகளும் உள்ளன. முஸ்லிம் பாடசாலைகள் பன்னிரண்டும் இயங்குகின்றன. குறித்த ஐந்து தமிழ்ப் பாடசாலைகளும் மொரவக்க மற்றும் அக்குரஸ்ஸ ஆகிய இரு கல்வி வலயங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அக்குரஸ்ஸ கல்வி வலயம்:

அக்குரஸ்ஸ வலயத்திலுள்ள உலந்தாவ தமிழ் மகாவித்தியாலயம் பிட்டபத்தர என்ற பிரதேசத்தில் இங்குகின்றது. க.பொ.த சாதாரணதர வகுப்புகள் வரை கொண்ட இப்பாடசாலையில் சுமார் 350 மாணவ, மாணவியர் கற்று வருகின்றனர்.

மொரவக்க கல்வி வலயம்:

மொரவக்க வலயத்தில் இயங்கும் நான்கு தமிழ்ப் பாடசாலைகளான தெனியாய, ஹன்போர்ட் தமிழ் மகா வித்தியாலயம், பேவரெலிகம, பேவரெலி தமிழ் மகாவித்தியாலயம், தெனியாய, விஹாரஹேனவிலுள்ள எனசல் வத்த தமிழ் வித்தியாலயம், தெனியாயவிலுள்ள அனில்கந்த தமிழ் வித்தியாலயம் ஆகியவற்றில் முதலாம் வகுப்பு முதல் சாதாரண தர வகுப்புகள் வரை நடைபெற்று வருகின்றன. ஓரிரு பாடசாலைகளில் உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தாலும் கூட அவை உரிய தரத்திற்குத் தரமுயர்த்தப்பட்டதாகத் தெரியவில்லை.

இருமொழிப் பாடசாலையான சென். மத்தியூஸ் மகாவித்தியாலயத்தில் தமிழ்மொழி மூல உயர்தர வகுப்புகளில் கலைப்பாடங்கள் சில கற்பிக்கப்படுவதுடன் அப்பாடசாலையில் நூறுக்குக் கிட்டிய எண்ணிக்கையில் தமிழ் மாணவ, மாணவியர் கற்று வருகின்றனர். மாத்தறை மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளில் 2800 வரையான பிள்ளைகள் கற்று வருகின்றனர். மாவட்டத்தில் பரந்து வாழும் தமிழ்ப் பிள்ளைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சிங்களப் பாடசாலைகளிலும், முஸ்லிம் பாடசாலைகளிலும் அவர்கள் கற்று வருகின்றனர்.

மொரவக்க கல்வி வலயத்தை உள்ளடக்கிய தெனியாய தேர்தல் தொகுதியிலேயே மெருமளவு தமிழ் மக்கள் பெருந்தோட்டங்களில் வாழ்ந்து வருகின்றனர். பல இந்துக்கோயில்கள் இங்கு காணப்படுகின்றன. அதேபோல் அக்குரஸ்ஸ கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் தமிழ் மக்கள் பெருந்தோட்டங்களிலேயே அதிகமாக வாழ்கின்றனர். இத்தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களை இலக்காகக் கொண்டு மதமாற்ற நடவடிக்கைகளும் அதிகளவில் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.

மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலகப் பிரிவுகளில் கொடபொல பிரதேச செயலகப் பிரிவு தமிழ் மொழிக்கு உரிமையுள்ள பிரதேச செயலகப் பிரிவாக பிரகடனப்படுத்த அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறுள்ள நிலையில் மாவட்டத்திலுள்ள ஒரு தமிழ்ப் பாடசாலையாவது கிட்டிய பாடசாலை சிறந்த பாடசாலை என்ற கூற்றுக்கமைய உரிய வளங்கள் வழங்கப்பட்டு தரமுயர்த்தப்பட வேண்டுமென்பது பெற்றொரின் எதிர்பார்ப்பாகும். உயர்தர வகுப்புகளில் கலைப்பாடங்கள் சில மட்டுமே கற்பிக்கப்படும் நிலையில் வர்த்தக மற்றும் கணித, விஞ்ஞானப் பிரிவுகளும் ஆரம்பிக்கப்படுவது பயனுள்ளதாயமையும்.

பொதுவாகவே இம்மாவட்ட தமிழ்ப் பாடசாலைகளில் ஆசிரிய ஆளணிப் பற்றாக்குறை பெருமளவில் காணப்படுகின்றது. ஆரம்பக் கல்வி, தமிழ், சித்திரம், இந்து சமயம், கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம், அழகியற் பாடங்கள், தொழில்நுட்பப் பாடங்கள் ஆகியவற்றுக்கான ஆசிரிய வெற்றிடங்கள் நிரப்பப்பட வேண்டும். குறித்த தமிழ்ப் பாடசாலைகள் அனைத்தும் தென்மாகாண சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாகாணப் பாடசாலைகளென்பதும் குறிப்பிடத்தக்கது.

த. மனோகரன்
(துணைத் தலைவர், கலவிக்குழுச் செயலாளர்) அகில இலங்கை இந்து மாமன்றம்


Add new comment

Or log in with...