ரஞ்சனுடன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநிறுத்தம் | தினகரன்


ரஞ்சனுடன் உரையாடல்; பத்தேகம நீதவான் பணி இடைநிறுத்தம்

- கிஹான் பிலபிட்டிய தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை
- நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நடவடிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படும் பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபாலவின் பணியை இடைநிறுத்தியுள்ளதாக நீதிச்சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.     

இதேவேளை, தொலைபேசி கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  நீதிச்சேவைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பத்தேகம நீதவான் தம்மிக்க ஹேமபாலவின் இடைக்காலப் பணி நீக்கத்தினால் வெற்றிடமாகியுள்ள இடத்திற்கு பதில் கடமையாற்றுவதற்காக சிலாபம் மேலதிக நீதவான் ரக்கித்த அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

இதேவேளை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பாக பல சர்ச்சைக்குரிய வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவின் முறைப்பாட்டின் அடிப்படையில் உள்ள சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். 

கிஹான் பிலபிட்டிய தற்போது எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றுகிறார்.

தொலைபேசி பதிவுகள் சமூக ஊடகங்களில் வெளிவந்த நிலையில் அதுபற்றி நீதிபதி கிஹான் பிலபிட்டிய பதில் பொலிஸ் மாஅதிபர் சி.டி. விக்ரமரட்ணவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.  

அவர் கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நீதவானாக இருந்தபோதே ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் மேற்படி முறைப்பாட்டை செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் அப்போதைய பொலிஸ் மாஅதிபர் என். கே. இலங்ககோன் விசாரணையொன்றை மேற்கொண்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.  

மேற்படி நீதிபதி கிஹான் பிலபிட்டியவின் முறைப்பாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததற்கான காரணம் எதுவும் தனக்குத் தெரியவில்லையென்று அவர் கூறியுள்ளார்.  

நீதிபதி கிஹான் பிலபிட்டியவின் முறைப்பாட்டின் அடிப்படையில் முழு அளவிலான விசாரணையொன்றை நடத்துமாறு மேற்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தென்னகோனுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப கொழும்பு குற்றச்செயல்கள் பிரிவு நீதிபதி பிலபிட்டிய உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளது.

ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பான பகுப்பாய்வு தற்போது பல விசாரணையாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.


Add new comment

Or log in with...