அரசு வழங்கிய கடன் சலுகை 31ஆம் திகதிக்கு முன் வங்கிகளுக்கு செல்லுங்கள் | தினகரன்


அரசு வழங்கிய கடன் சலுகை 31ஆம் திகதிக்கு முன் வங்கிகளுக்கு செல்லுங்கள்

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களின் உற்பத்திகளை விரிவு படுத்தவும் கடன் சுமைகளிலிருந்து விடுபடவும் அரசாங்கம் வழங்கியுள்ள கடன் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பித்தோர் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் வங்கிகளுக்குச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வங்கிகள் மற்றும் கடன் திட்டங்கள் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் காரணமாக நாட்டின் பொருளாதார மற்றும் மக்களின் நலன் திட்டங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானங்கள் முறையாக மக்களுக்குச் சென்றடையவில்லை. 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாட்டின் பொருளாதாரம் 1.6 சதவீத்தால் வீழ்ச்சிக் கண்டிருந்தது. முறையான நிதிக் கொள்கையும், பொருளாதாரக் கொள்கையும் இல்லாது கடந்த அரசாங்கம் பயணித்ததுடன், ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான அதிகாரப் போட்டியே நிலவியது. ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒருமுறை மறுசீரமைக்கப்படும் பொருளாதார மற்றும் நிதிக் கொள்கையையே கடந்த அரசாங்கம் பின்பற்றியது.

24 சதவீதம் வரை வரி அறவீட்டை அதிகரித்திருந்ததுடன், வரிப் பணத்தில் அரச வருமானத்தை ஈட்டிக்கொள்ள முற்பட்டனர். மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியை தொடர்ந்தே வரிகளை அதிகரித்து அதன்மூலம் வருமானத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்டிருந்தனர். ஆனால், எமது அரசாங்கம் மக்களின் வாழ்க்கைச் செலவையும், நாட்டின் அபிவிருத்தியையும் அடிப்படையாகக் கொண்டே தீர்மானங்களை எடுக்கும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...